செடிப்புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு: நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்குமா?

நெல்லையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தி செய்யப்பட்டு வரும் செடிப்புட்டா சேலைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இனியாவது நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுமா? இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு...
செடிப்புட்டா சேலை - நெசவாளர்கள்
செடிப்புட்டா சேலை - நெசவாளர்கள்pt desk

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா புதுக்குடியில் நெசவாளர்களால் பிரத்யேகமாக நெய்யப்படும் செடிப்புட்டா கைத்தறி சேலைகளுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அறிவித்துள்ளது. அரசின் இந்த செய்தி இப்பகுதி நெசவாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது.

அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற நெசவு கிராமங்களின் பின்னணி....

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவில் உள்ள புதுக்குடி, கிளாக்குளம், வீரவநல்லூர், வெள்ளாங்குழி உள்ளிட்ட நான்கு கிராமங்களில் சுமார் 1,000 கைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. இதில், புதுக்குடி கிராமத்தில்தான் மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்ற செடிப்புட்டா சேலைகள் அதிக அளவில் நெய்யப்படுகிறது. சுமார் 250 வீடுகள் வரை உள்ள இக்கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் கைத்தறி நெசவு கூடங்களை அமைத்துள்ளனர்.

saree
sareept desk

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பிரதிபலிக்கும் வகையில், தகரங்களாலும் ஓடுகளாலும் அமைந்துள்ள இந்த வீடுகளுக்குள்ளேதான், தொழில் செய்யும் கைத்தறிக் கூடங்களும் அமைந்துள்ளன. அங்கேயே தறி நெய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒரு அறையில் தறி, மறுஅறையில் சமையலறை. தறிக்கு அருகிலேயே சாப்பாடு, தூக்கம், கனவு என வீடே கைத்தறி கூடம், கைத்தறி கூடமே வீடு என நெசவாளர்களின் வாழ்க்கை சிறிய வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறது.

வயதை அடையாளப்படுத்தும் விதமாக நிறம் மாறி நிற்கும் தறிகள்!

குறைந்தபட்ச பொருளாதார நிலையின் குறியீடாகவே நெசவாளர்கள் காட்சியளிக்கிறார்கள். சிப்பிக்குள் முத்து போல, மிகவும் நேரமெடுத்து இவர்கள் நெய்யும் சேலைகளில் தங்கள் திறமையை முழுமையாக காட்டி ஆடம்பரத்தின் உச்சமாக தயாரிக்கின்றனர். இப்படி மெனக்கெடலினுடன் தயாரிக்கப்படும் சேலைகளின் பெயர்தான், செடிப்புட்டா சேலைகள். இவைதான் புவிசார் குறியீட்டை அடையாளமாக பெற்றுள்ளன.

saree design
saree designpt desk

இந்த நெசவாளர்களுடன் பயணிக்கும் விதமாக அரசு சார்ந்து இயங்கும் 8 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் உள்ளது. இந்த சங்கங்கள், தறி நெய்யத் தேவையான மூலப் பொருளான பாவு, நூல் தளவாட பொருட்களை வழங்கி விடுகின்றன. நெய்யும் சேலைகளுக்கான கூலியும் சங்கம் மூலமாகவே கொடுக்கப்படுகிறது. இந்த சங்கத்தில் நெசவாளர் மூலம் பெறப்படும் சேலைகள் அனைத்தும் அரசின் கோ-ஆப்-டெக்ஸ் நிறுவனம் பெற்று அதன் விற்பனை கூடங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு செல்கிறது. அதேபோல் வடமாநில மக்களின் மிகவும் விருப்பத்திற்குரிய சேலையாக உள்ளதால் வட மாநிலங்களுக்கே அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

செடிப்புட்டா சேலைகள் வரலாறு....

கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படாத 1970 - 75 காலகட்டத்தில் மதுரையைச் சேர்ந்த என்.ஏ.ராமமூர்த்தி என்பவர், புதுக்குடி மக்களிடம் செடிபுட்டா சேலை நெய்வது குறித்து கற்றுக் கொடுத்துள்ளார்.

Weaver
Weaverpt desk

அவரால்தான் 50 ஆண்டுகளை கடந்து இன்றும் செடிப்புட்டா சேலைகள் நெய்யப்படுகிறது என்கின்றனர். குறிப்பாக இந்த சேலைகளில் வண்ண வண்ண நிறங்களில் பூக்கள் நெய்யப்பட்டிருக்கும். அவை எம்ராய்டிரிங் அல்ல.

தறியிலேயே நெய்யப்படும் பூக்கள் டிசைன்

எனில் அது என்னவென்றால் கைத்தறி சேலைகளில் பச்சை, சிகப்பு, மஞ்சள், ரோஸ், ஆரஞ்சு என வண்ண வண்ண நூல்களை பயன்படுத்தி முந்தானை தொடங்கி சேலை முழுவதிலும் ஆங்காங்கே 15 பூக்கள் வரை நெசவு மூலமாகவே மிக நுணுக்கமாக வரைகின்றனர். எம்பிராய்டிங் செய்யாமல் நேரடியாக நூல்களை நெசவின் மூலம் சேலையில் கோர்ப்பதாலேயே செடிப்புட்டா சேலைகள் நெய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்கின்றனர். குறிப்பாக புதுக்குடி கிராமத்தில் கடந்த 50 வருடங்களாக செடிப்புட்டா சேலைகள் பாரம்பரியமாக நெய்யப்படுகிறது.

கஷ்டமான வேலை... குறைவான கூலி!

ஒரு சேலை நெய்வதற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆகும். ஒரு சேலைக்கு சங்கத்தின் மூலம் 486 ரூபாய் கூலி கொடுக்கப்படுகிறது. இந்த கூலியில் 8 சதவீதம் சிக்கனம் என (39 ரூபாய் பிடித்தம்) சேமிப்பாக சங்கத்தின் மூலம் பிடிக்கப்படுகிறது. சேமிப்பு பிடித்தல் போக 447 ரூபாய் மட்டுமே ஒரு சேலைக்கு கூலியாக கிடைக்கிறது.

sarees
sareespt desk

இதனால் மாதம் அதிகபட்சமாக 4000 ரூபாய்க்குள் தான் வருமானம் கிடைக்கிறது. இந்த குறைந்த வருவாய் காரணமாகவே செடிப்புட்டா சேலைகள் நெய்வதற்கு நெசவாளர்கள் பலரும் முன் வருவதில்லை. 50 வயதை தாண்டிய நெசவாளர்கள் மட்டுமே மிகவும் மெனக்கெட்டு செய்யக்கூடிய இந்த செடிப்புட்டா கைத்தறி சேலைகளை நெய்து வருவதாக கூறுகின்றனர்.

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்குமா புவிசார் குறியீடு?

இதன் காரணமாக 4 ஊர்களிலும் ஆயிரம் தறிகள் வரை இருந்தாலும் குறைந்த அளவு தறிகளே செடிப்புட்டா சேலைகளை நெய்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாக உள்ளது. செடிப்புட்டா சேலைகளுக்கு அரசின் அங்கீகாரம் புவிசார் குறியீடு மூலம் தற்போது கிடைத்து விட்டது. இது 50 ஆண்டு காலமாக நெய்து கொண்டிருக்கும் நெசவாளர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ஆனாலும், நெசவு செய்யும் ஒவ்வொருவர் வீட்டிலும் டப் டப் என தறி ஓடும் சத்தத்தின் பின்னணியில் விடுபட்ட நூலை போல இருக்கும் அவர்களின வாழ்க்கையில் குறைந்தபட்ச கூலி உயர்வுக்கான குரல் பலருக்கும் கேட்கவில்லை என்பதே யதார்த்த உண்மை. இனியாவது அவர்கள் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்படுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com