"இளைஞர்கள் வாழ்க்கையை பாழாக்கும் குடும்பத்தை மீண்டும் தேர்வு செய்யக் கூடாது" - நிர்மலா சீதாராமன்
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்...
"காங்கிரஸ் மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள், கிருஷ்ணகிரி பற்றியோ, ஒசூரை பற்றியோ நாடாளுமன்றத்தில் பேசினார்களா என்பது கேள்விக்குறி. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், மத்திய பாஜக அரசு பலவித திட்டங்கள் மூலமாக மக்களுக்கு ஏராளமான நல்ல விஷயங்கள் செய்துள்ளது. போதைப் பொருட்களை இறக்குமதி செய்து, நமது இளைஞர்கள் வாழ்க்கையை பாழாக்கும் குடும்பத்தை மீண்டும் தேர்வு செய்யக்கூடாது. அந்த குடும்பத்தோடு தான் ஜாபர் சாதிக் நேரடி தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
போதைப் பொருட்கள் மூலமாக வரக்கூடிய ஆதாயத்தில் பிழைக்கக் கூடிய எந்த குடும்பமும் வாழ்ந்ததில்லை. போதைப் பொருளை வைத்துக் கொண்டு ஆதாயத்திற்காக அரசியல் செய்யும் குடும்பத்தை நிராகரிக்க வேண்டும். தமிழகத்திற்கு போதை வேண்டாம். திமுகவை நிராகரிக்க வேண்டும். இதனால் ஆதாயம் தமிழகத்திற்கு இல்லை. அவர்கள் குடும்பத்திற்கு மட்டும் தான். இந்தியா அளவில் தமிழகத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி தனி அக்கறை செலுத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினார்.
பிரதமர் தமிழகம் வருவதை, தமிழக முதல்வர் birds migrate என்று கூறுகிறார். இந்த வார்த்தையே தவறானது. நாட்டின் பிரதமர் எங்கு வேண்டுமானாலும் செல்ல உரிமை உண்டு. ஒரு குடும்பத்திற்கு மட்டும் வளர்ச்சி உள்ளது. அதனை மாற்றி, தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பிரதமர் தமிழகம் வந்து செல்கிறார்" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.