
தமிழக டிஜிபி-யின் அறிவுறுத்தல் படி 4 ஆம் கட்ட கஞ்சா சோதனை இன்று முதல் வரும் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில். இன்று அதிகாலை அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பாஸ்கர், கார்த்திக் மற்றும் போலீசார் பட்டரைவாக்கம், அம்பத்தூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்தனர்.
அப்போது அண்ணனூர் ரயில் நிலையத்திற்குச் சென்ற போலீசார், அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த 2 பேரை நோட்டமிட்டு அவர்களிடம் பேச்சுக் கொடுத்தனர். அப்போது இருவரும் கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை உடனடியாக மடக்கிப் பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில், சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 20.4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த கவிராஜ் (24), அஜித் குமார் (25) என்பதும், அவர்கள் இருவரும் அடிக்கடி அம்பத்தூர், கொரட்டூர், அண்ணனூர் ரயில் நிலையங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.