இரவு நேரங்களில் பேருந்தை கற்களால் தாக்கும் கும்பல் கைது
பேருந்துகள் மீது தொடர்ச்சியாக கல்வீசி தாக்குதல் நடத்தும் சம்பவத்தில் ஈடுபட்டதாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இளைஞர்கள் பலர் சாலையில் செல்லும் அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளின் மீது நள்ளிரவு நேரத்தில் கல்வீசித் தாக்குதல் நடத்தி வந்தனர். இதைபோல சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதில் இதுவரை பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் பஸ் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை அறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் நள்ளிரவு நேரத்தில் சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் வாகனத்தின் மீதும் அந்தச் சமூக விரோத இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் பதட்டம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தொடர்ச்சியாக பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தும் சம்பவத்தில் ஈடுபட்டதாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் சிறார்கள் என்பதால் அவர்களை விழுப்புரம் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பி கொண்டு செல்லப்பட்டனர்.