உதவியவருக்கு உதவுங்கள் : அனைத்தையும் இழந்து தவிக்கும் சமூக சேவகர் 515 கணேசன்

உதவியவருக்கு உதவுங்கள் : அனைத்தையும் இழந்து தவிக்கும் சமூக சேவகர் 515 கணேசன்
உதவியவருக்கு உதவுங்கள் :  அனைத்தையும் இழந்து தவிக்கும் சமூக சேவகர் 515 கணேசன்

சுனாமி முதல் கேரள வெள்ள பாதிப்பு வரை பலரின் துயர் துடைத்த சமூக சேவகர் 515 கணேசனின் கண்ணீரை துடைக்க தற்போது ஆளில்லை. 

சுனாமி தொடங்கி கேரள மழை வெள்ளம் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடியோடி உதவி செய்த சமூக சேவகர் ஆலங்குடி 515 கணேசனையும் கஜா புயல் விட்டு வைக்கவில்லை. ஊரையே சூறையாடிய கஜா புயல் கணேசன் வீட்டை சின்னாபின்னமாக்கிவிட்டது. இந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட ஊர் ஊராக அலைகிறார் கணேசன்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் கணேசன். 515 கணேசனை தெரியாதவர்கள் யாருமில்லை. ஆம்புலன்ஸ் தேவை என்றால் ஆலங்குடி சுற்றுவட்டார மக்களுக்கு இரண்டு எண்கள் நினைவுக்கு வரும். ஒன்று 108, மற்றொன்று 515. ஐம்பது ஆண்டுகளாக இரண்டு அம்பாசிடர் கார்கள் மூலம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை ‌இலவசமாகக் கொண்டு போய் சேர்த்தவர். அக்காலத்தில் பேய் பயத்தில் மறைந்தவர்களின் உடலைக் காரில் ஏற்ற மாட்டார்கள். கணேசன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதே இல்லை. 

தொடக்கத்தில் இரும்புக்கடையில் பணியாற்றிய கணேசன், கிளீனராகவும் இருந்திருக்கிறார். 1968ஆம் ஆண்டு மறைந்த கணவரின் உடலை கொண்டு செல்ல முடியாமல் பெண் ஒருவர் தவித்ததைப் பார்த்த கணேசன், தனது சேமிப்பான 17 ஆயிரம் ரூபாயை கொடுத்து பழைய அம்பாசிடர் கார் ஒன்றை வாங்கினார். அதன் பதிவெண்தான் 515. அன்று முதல் இன்று வரை கர்ப்பிணிப் பெண்களையும், விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, மறைந்தவர்களின் உடல்களை ஏற்றிச் செல்வது என தனது சேவையை தொடர்கிறார் கணேசன். 

இதுதவிர இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான நிதியை வசூலித்து கொடுத்துள்ளார். இவரது சேவையை பாராட்டி பெங்களூரைச் சேர்ந்த பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ஊருக்கெல்லாம் உதவிக்கரம் நீட்டிய கணேசன் கஜா புயலுக்கு தனது வீட்டையும் அதிலிருந்த பொருள்களையும் பறிகொடுத்துவிட்டு வாழ வழியின்றி தவிக்கிறார். அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்பதே கசப்பான உண்மை.


அனைத்தையும் இழந்திருக்கும் கணேசன் நிதி திரட்ட‌ ஊர் ஊராகச் செல்கிறார். அவருக்காக அல்ல, புயலால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்காக. வாழ வழியின்றி தவிக்கும் போதும் கணேசனால் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடிகிறது? ஏனெனில் அவர் 515 கணேசன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com