‘கஜா’ புயலால் சேதமடைந்த எரிபொருள் நிலையங்கள் - மக்கள் அவதி
‘கஜா’ புயல் தாக்குதலால் பட்டுக்கோட்டையிலிருந்து வேளாங்கண்ணி வரையுள்ள எரிபொருள் நிலையங்கள் சேதமடைந்துள்ளன.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் புயல் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள எரிபொருள் நிலையங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
‘கஜா’ புயலின் தாக்குதல் குறிப்பாக பட்டுக்கோட்டையிலிருந்து வேளாங்கன்னி வரை 12-எரிபொருள் நிலையங்கள் தூக்கி எறியப்பட்டு சின்னாப்பின்னமாகியது. இதனால் எரிபொருள் நிலையம் இயங்கவில்லை. அங்கு சுனாமிக்கு நிகரான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
குடியிருப்பு பகுதிகள், வணிக நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் என பாராபட்சம் இன்றி ‘கஜா’ புயல் அதன் வலுவை காட்டிச் சென்றுள்ளது. அதற்கு பெட்ரோல் பங்குகளும் தப்பவில்லை. பெட்ரோல் நிலையங்களின் அனைத்து இயந்திரங்களும் பாதிப்படைந்துள்ளதால், அவை சரிசெய்ய சில நாட்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. அதுவரை மக்கள் பயன்பெறும் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.