கஜா புயல் பாதிப்புகள் : தஞ்சை ஆட்சியரை தொடர்புகொள்ள 1077-ஐ அழைக்கவும்
கஜா புயல் காரணமாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள ஏற்பாடுகள் செய்து வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இளைஞர்கள் உதவி வருகின்றனர். ஒரு இளைஞர் தனது கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மக்களுக்கு உதவி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ’கஜா’ புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பல லட்சம் மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் முற்றிலும் நிலைகுலைந்துள்ளன. மீட்புப் பணிகளையும், உதவிகளையும் எதிர்பார்த்து மக்கள் தவித்து வருகின்றனர். அரசு சார்பில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் புயல் பாதிப்பு குறித்து ஆட்சியர் அலுவலகத்தை தொடர்புகொள்ள வசதியாக 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 04366 2260 40, 04366 2260 50, 04366 2260 80, 04366 2760 90 ஆகிய தொலைபேசி எண்களிலும் வடகிழக்கு பருவமழை தொடர்பான தங்களுடைய கோரிக்கைகளை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தலாம். அவசர உதவிக்கு புயலுக்கு முன்பே தரப்பட்ட 043 6525 1992 என்ற எண்ணில் எந்த மாற்றமும் இல்லை. அத்துடன் 100 என்ற இலவச எண்ணில் காவல்துறையையும், 101 என்ற இலவச எண்ணில் தீயணைப்புத்துறையையும் தொடர்பு கொள்ளலாம்.