கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மீட்புப் பணியில் இளைஞர்
கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மக்களுக்கு உதவி வரும் இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இளைஞர்கள் உதவி வருகின்றனர். ஒரு இளைஞர் தனது கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மக்களுக்கு உதவி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பல லட்சம் மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் முற்றிலும் நிலைகுலைந்துள்ளன. மீட்புப் பணிகளையும், உதவிகளையும் எதிர்பார்த்து மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இளைஞர்கள் பலர் களமிறங்கியுள்ளனர். இதில், கரம்பையம் கிராமத்தை சேர்ந்த ரகு என்ற இளைஞர் தனது கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மக்களுக்கு உதவி புரிய களத்தில் இறங்கியுள்ளார். அவர் கூறும்போது, “எனது மனைவி 9 மாத கர்ப்பிணி. நான் விட்டுக்கு சென்று 2 நாட்கள் ஆகின்றன. இளைஞர்கள் நாங்கள் எங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்து வருகிறோம்.
அத்துடன் தீயணைப்புத்துறையினருக்கும் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். இங்கே புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களில் நிறைய குழந்தைகள் உள்ளனர். ஒரு வயது, ஒன்றரை வயது குழந்தைகள் பால் மற்றும் உணவின்றி தவித்து வருகின்றனர். நாங்கள் இளைஞர்கள் இணைந்து இன்று அவர்களுக்கு 1,000 லிட்டர் பால் வழங்கியுள்ளோம். அந்த குழந்தைகளுக்கு அத்யாவசிய தேவையான உணவு, பால் மற்றும் தண்ணீரை மட்டும் அரசு வழங்கினால் ரொம்ப உதவியாக இருக்கும்” என தெரிவித்தார்.