“கஜா புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது” - மத்திய குழு தலைவர் பேட்டி
கஜா புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்றும் சீரமைப்பை மேற்கொள்ள நீண்ட காலம் தேவைப்படுகிறது என்றும் மத்திய ஆய்வுக் குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் கூறியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளில் மத்தியக் குழுவினர் மேற்கொண்டு வந்த ஆய்வு இன்றுடன் நிறைவடைந்தது. 3ஆவது நாளான இன்று மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான குழுவினர், நாகை மாவட்ட பகுதியில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். காலை 8.30 மணிக்கு விடுதியில் இருந்து புறப்பட்ட அதிகாரிகள், விழுந்தமாவடி பகுதியில் ஆய்வுப் பணியை தொடங்கினர். அங்கு புயலால் கடும் சேதமடைந்த துணை மின் நிலையத்தை பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து வேட்டைகாரனிருப்பு கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மத்தியக் குழுவினர் சந்தித்தனர். அங்கிருந்த முகாமிற்குச் சென்ற மத்தியக் குழுவினர், மக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
கோவில்பத்து என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள நுகர்பொருள் வாணிகக் கிடங்கும் கஜா புயலில் சேதமடைந்ததுள்ளது. அதனையும் ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து பெரியகுத்தகை என்ற கிராமத்திற்குச் சென்று முகாம்களில் உள்ள மக்களிடம் குறைகளையும், பாதிப்புகளையும் கேட்டறிந்தனர்.
ஆய்வை முடித்தை பின்னர் புதிய தலைமுறைக்கு மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட் அளித்த பேட்டியில், “கஜா புயலால் நாகை மாவட்டம் புஷ்வனம் பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடல்நீர் மற்றும் காற்று பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள், படகுகள் சேதமடைந்துள்ளன. இந்தச் சேதங்களை சரி செய்வது மிகவும் சிரமம். கஜா புயலால் மீனவர்கள் படகுகள் சேதமடைந்துள்ளன. நிறைய படகுகள் சேற்றில் சிக்கியுள்ளன. முதலில் அவற்றை மீட்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு இயன்ற வரை சிறப்பாக பாணியாற்றி வருகிறது. சேதம் அதிகம் என்பதால் அவற்றை சரி செய்வதற்கு சற்று காலம் தேவைப்படும். சாலையின் இரு புறங்களிலும் சேதத்தை பார்க்க முடிகிறது.
ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் பசுமை நிறைந்த பகுதிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் தடுக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.