மீண்டும் வருகிறது கெயில் திட்டம்: விரைந்து முடிக்க பிரதமர் உத்தரவு
தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் கெயில் குழாய் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
இது தொடர்பான பணிகளை விரைவுபடுத்துமாறு கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளை பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டம் குறித்து விவசாயிகள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கும் வகையில் குழாய் பதிக்கும் இடத்திற்கு சென்று விளக்குமாறும் அதிகாரிகளை பிரதமர் பணித்துள்ளதாக தெரிகிறது.
வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் எரிவாயுவை கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகத்தின் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூருவுக்கு கொண்டு செல்ல கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் வயல்களில் குழாய் பதிப்பதால் பாதிப்புகள் ஏற்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எனவே இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.