மக்கள் பிரச்னைக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்... ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்
மக்கள் பிரச்னைக்காக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து, சென்னை மேடவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பங்கேற்றவர்களை, பள்ளிக்கரணை போலீசார் கடுமையாக தாக்கி அழைத்துச் சென்றதாகவும், பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 14 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதுடன், நிபந்தனையின்றி அவர்களை விடுவிக்க வேண்டும் என்று ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மக்கள் பிரச்னைக்காக ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தியுள்ளார்.