தமிழகத்தில் மேலும் 61 கொரோனா மரணம் : அதிகபட்சமாக சென்னையில் 30..!
தமிழகத்தில் மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1,14,978-ஐ எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 3,827 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கடந்த சில நாட்களாக நான்காயிரத்தை கடந்து பதிவான கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. ஆனால் இறப்பு விகிதம் குறையவில்லை. இன்று மட்டும் 61 கொரோனா மரணங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,571 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உயிரிழப்பு சதவீதம் 1.36 ஆக உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் 8, மதுரையில் 7, திருவள்ளூரில் 5, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலையில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர மேலும் சில மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர். சென்னையில் மட்டும் மொத்தமாக இதுவரை 1,082 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் செங்கல்பட்டில் 128, திருவள்ளூரில் 100, மதுரையில் 69, காஞ்சிபுரத்தில் 36, ராமநாதபுரத்தில் 21 என மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை உள்ளது.
அத்துடன், எவ்வித இணை நோயும் இல்லாத 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 வயதுக்குட்பட்டோர் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 14 வயது சிறுமி ஒருவரும், 28 வயது நபர் ஒருவரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.