“சாவுக்கு காரணம் திருச்சி போலீஸ்”-எழுதி வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி
பட்டுக்கோட்டையில் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளரின் மரண வாக்குமூலம் தற்பொழுது வெளியாகி உள்ளது.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரோஜா ராஜசேகர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளர் ஆக இருந்த இவர், ரோஜா கோல்டு ஹவுஸ் நகை கடை உரிமையாளராகவும் இருந்தார். இவர் தனது கடையில் திருட்டு நகை வாங்கியதாக கூறி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் உமா சங்கரி என்பவர் ரோஜா ராஜசேகரையும் அவரது மனைவியையும் கைது செய்துள்ளார்.
தன்னை தனது மனைவிக்கு முன்பாக தரக்குறைவாக நடத்தியதாக கூறி உறவினரிடமும் நண்பர்களும் புலம்பி கொண்டிருந்த ரோஜா ராஜசேகர் சம்பவத்தன்று இரவு பட்டுக்கோட்டை அருகே உள்ள செட்டிய காடு என்ற பகுதியில் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற ரயிலின் முன்பாக பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடலை வாங்க மறுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பட்டுக்கோட்டை நகைக்கடை உரிமையாளர்கள் சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து திருச்சி குற்றப்பிரிவு காவல் துறை உதவி ஆய்வாளர் உமா சங்கரி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு உடல் பெற்றுக் கொள்ளப்பட்டது. அதேசமயத்தில் இடமாற்றம் மட்டும் போதாது என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இறந்து போன ரோஜா ராஜசேகர் எழுதிய மரண வாக்குமூலம் கிடைத்துள்ளது. இதன் காரணமாக திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் உமாசங்கரியின் மீதான புகாருக்கான முகாந்திரம் தீவிரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன உளைச்சல் ஏற்படுத்திய ஒரு உதவி காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டது மட்டும் போதாது என்றும் அவர் மீது ரோஜா ராஜசேகரின் தற்கொலைக்கு காரணம் என்பதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்க தீவிரமடைந்துள்ளது.
ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ரோஜா ராஜசேகரின் உறவினரான வாசன் என்பவர் பத்திரிகையாளர்களுக்கு ரோஜா ராஜசேகர் இறப்பதற்கு முன்பு அவரது கடையில் இருந்த பில் புத்தகத்தில் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதங்களை வீடியோவாக எடுத்து அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள விபரம்:
சாவுக்கு காரணம் திருச்சி போலீஸ்
மனைவியை கைது செய்தது
எனக்கு உயிர் ரோஜா,
தனலட்சுமி, விஜயன், வாசன் மற்றும் நிறைய
வாசன், விஜயன் தைரியமாக கடையை நடத்த வேண்டும்
உடனே தாமதிக்காமல் மின் சுடுகாட்டில் முடிக்கவும், சாவு திருவிழா நடத்தக்கூடாது
எவ்வித தொடர் சடங்கும் நடத்தக் கூடாது, இறுதி சடங்குகள் எதுவும் வேண்டாம்” என்று ஒவ்வொரு பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்த ஆறு துண்டு சீட்டுகளையும் ரோஜா ராஜசேகரின் உறவினரான வாசன் என்பவர் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி உள்ளார்.
இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி இறப்பு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தமது ட்விட்டர் பக்கத்தில், “போராட்ட குணம் உள்ள பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார் என்று சொன்னால் அதற்கு காரணமானவர்கள் மீது, ஓய்வு பெற உள்ள நிலையிலாவது தமிழக காவல் துறை தலைவர் (DGP) மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண் காவலர் ராஜசேகரையும், அவரது குடும்பத்தினரையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கினார் என்ற செய்தி ஏற்புடையதல்ல.
பட்டுக்கோட்டை நகைக் கடை அதிபர் ராஜசேகர் தற்கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கை, தனி அமைப்பை நியமித்து விசாரிக்க வேண்டும். காவல் துறையினரின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட ராஜசேகர் அவர்களுடைய குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என்றும்; இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் உட்பட அனைவரையும் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.