கணிதமேதை ராமானுஜன்
கணிதமேதை ராமானுஜன்PT

இன்றைய அதிநவீன உலகத்தையும் ஆட்டிவைக்கும் தமிழனின் அறிவு.. ராமானுஜன் எனும் ஜீனியஸ்!

டிசம்பர் 22-ம் தேதியான இன்று கணிதமேதையான ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்தநாளின் சிறப்பு தொகுப்பாக, இந்தியாவில் பிறந்த மாமேதையின் வாழ்க்கை பயணங்கள் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
Published on

செய்தியாளர் - பால வெற்றிவேல் நவநீதகிருஷ்ணன்

ஒருவர் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வந்தார். ஏழையாக இருந்தார். அவருக்கு போதிய கல்வியோ அல்லது கணித திறனை வளர்த்துக் கொள்வதற்கான புத்தகங்களோ கூட கிடைக்கவில்லை. ஆனால் நவீன உலகில் நாம் பயன்படுத்தி வரும் அத்தனை தொழில்நுட்பத்திற்கும் காரணமான கணித தேற்றங்களையும் சமன்பாடுகளையும் உருவாக்கினார். இப்போது இருப்பது போன்று இணைய வசதி ஏதும் இல்லாத காலகட்டத்திலேயே அவரது கண்டுபிடிப்புகள் நூறாண்டுகளுக்கு பின்பும் முழுமையாக புரிந்து கொள்ளப்படாமல் இருக்கிறது. ஒருவேளை இணையம் இருந்திருந்தால் அவரது வீச்சு எந்த அளவிற்கு முன்னேறி இருக்கும். அவர் பெயர்தான் ஸ்ரீனிவாச ராமானுஜம்... - பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜீக்கர்பெர்க் கூறிய வார்த்தைகள் தான் இவை.

தமிழ்நாட்டில் ஈரோட்டில் இருந்து பிறந்த இருவர் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஒருவர் ஈ.வே ராமசாமி பெரியார். மற்றொருவர் கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன். ஒருவர் அரசியல் புரட்சியை ஏற்படுத்தினார் என்றால், மற்றொருவர் அறிவியல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஸ்ரீனிவாச ராமானுஜன்
ஸ்ரீனிவாச ராமானுஜன்

ராமானுஜன் பற்றி இன்று தமிழ்நாட்டில் பிறந்த நமக்கோ இந்தியாவில் மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கோ தெரியாமல் இருக்கலாம். ஆனால் மேற்குலகமும் அறிவுலகமும் இன்றும் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது...

இன்னமும் தொலைந்து பிற்பாடு கண்டுபிடிக்கப்பட்ட நோட்டுப் புத்தகத்தில் இருந்து கணித ஆராய்ச்சிகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. 32 வயது வரை மட்டுமே வாழ்ந்த அவரது சமன்பாடுகளை கொண்டு 14,000 மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் இதுவரை வெளியாகி இருக்கிறது. சீனிவாச ராமானுஜரின் 137 வது பிறந்த நாளான இன்று அவரின் வாழ்க்கையை பற்றியும் சாதனையும் அறிவும் வறுமையும் பிணியும் நிறைந்த பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்ரீனிவாச ராமானுஜரின் ஆரம்ப வாழ்க்கை:

பிறப்பு மற்றும் குடும்பம்:

ஸ்ரீனிவாச ராமானுஜர் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை குப்புசாமி ஐயங்கார் ஈரோட்டில் வியாபாரியின் உதவியாளராகப் பணிபுரிந்தார். தாயார் கோமதம்மாள் இல்லத்தரசியாகவும் நாள்தோறும் கோவிலுக்கு செல்வதிலும் ஆர்வமாக இருந்தார்.

கல்வி ஆரம்பம்:

ராமானுஜன் ஈரோட்டில் உள்ள காம்பரன் பள்ளியில் தனது ஆரம்ப கல்வியைத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே அவருக்கு கணிதத்தில் தனித்திறமை இருந்தது.

ஏழாவது வயதில் தான் வகுப்பில் முதலிடத்தைப் பெற்றார். 10வது வயதில் கணிதத்தில் ஆழ்ந்த ஆர்வத்தை வளர்த்தார். அவர் பள்ளியில் உள்ள ஆசிரியர்களை விட மிகக் கடினமான கணித சமன்பாடுகளை தீர்த்தார். அது ஆசிரியர்களுக்கு அவர் மீது கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது. 13வது வயதில் எஸ்.எல். லோனியின் "Advanced Trigonometry" என்ற புத்தகத்தை முழுமையாக படித்துவிட்டு அதில் உள்ள அனைத்து சிக்கல்களையும் தீர்த்தார்.

மகத்தான ஆர்வம்:

16வது வயதில் "A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics" என்ற புத்தகம் அவரை முற்றிலும் கவர்ந்து, கணிதத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

சிறு வயதில் ராமானுஜரின் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அவரால் எழுதுவதற்கு பேனாவும் நோட்டும் வாங்க முடியாத நிலையில் கோவில் வளாகத்தில் தரையில் சுண்ணாம்பு சாக்கு கட்டிகள் மூலம் கணித சமன்பாடுகளை எழுதி தீர்ப்பார். அவர் தரையில் அமர்ந்து எழுதுவதை பார்க்கும் பலரும் கேலி செய்துவிட்டு "கோலம் வரைந்தாலாவது பணம் கிடைக்கும், இவன் புரியாத எண்களை எழுதி கோவிலின் அழகை கெடுக்கிறான்" என திட்டி விட்டு செல்வார்கள்.

அறிவிருந்தும் பணம் இல்லாததால் உயர் கல்வியை அவரால் எளிதாக பெற முடியவில்லை.

ஸ்ரீனிவாச ராமானுஜரின் கல்லூரி படிப்பு:

ராமானுஜர் 1904 ஆம் ஆண்டில் கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி மாணவனாக இருந்தபோது அவர் கணிதத்தில் தனது மேதையினைக் காட்டினார். ஆனால் அவரது ஆர்வம் முழுவதும் கணித பாடத்தில் மட்டும் இருந்ததால் அறிவியல் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் குறைவான மதிப்பெண்ணே பெற்றார்.

இவரது மனம் முழுவதும் கணிதம் மட்டுமே நிரப்பி இருந்ததால், 1905 ஆம் ஆண்டு அவர் கல்லூரி தேர்வில் தோல்வியுற்றார். இதனைத் தொடர்ந்து, அவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் சேர முயற்சி செய்தார். அங்கும் அவரது கணித திறமையை கண்டு வியந்த சக பேராசிரியர்கள் அவரை 17 வயதிலேயே மிகப்பெரிய மேதாவியாக பார்க்கத் தொடங்கினர். ஆனால் பச்சையப்பன் கல்லூரியிலும் கணிதம் மட்டுமே படித்ததால் மற்ற பாடங்களில் தோல்வி அடைந்தார். கடைசி வரை கல்லூரி படிப்பை அவரால் முடிக்கவே முடியவில்லை.

கல்லூரியில் தொடர்ந்து வெற்றி பெறவில்லை என்றாலும், ராமானுஜர் தனது நேரத்தை முழுமையாக கணித ஆராய்ச்சியில் செலவிட்டார். இவருடைய ஆர்வமும் பண்பும் அவருக்கு புத்தகங்கள் மூலம் தன்னிச்சையான கல்வியை மேம்படுத்த அனுமதித்தன.

திருமண வாழ்க்கை:

ஸ்ரீனிவாச ராமானுஜர் 1909 ஆம் ஆண்டு, 22 வயதில் 9 வயதான ஜானகி அம்மாள் எனும் குழந்தையை திருமணம் செய்தார். அந்தக் காலத்தில் 9 வயதில் திருமணம் செய்வது சர்வ சாதாரணமான விஷயம் என்கிற நிலையில், ராமானுஜரின் திருமணம் அவரது தாயின் முயற்சியால் ஏற்பாடாகியது. ராமானுஜரின் கணித ஆராய்ச்சியில் மனைவி ஜானகி அம்மாளின் ஆதரவு அளப்பரியது.

ராமானுஜரின் ஆராய்ச்சி மற்றும் பயணங்களில், குறிப்பாக அவர் இங்கிலாந்திற்கு சென்றபோது, ஜானகி அம்மாள் அவரைப் புரிந்துகொண்டு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

ஸ்ரீனிவாச ராமானுஜரின் துறைமுக பணி:

ராமானுஜர் தன் படிப்பை முடிக்க முடியாத நிலையில், தனது குடும்பத்தை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார்.

இதனால், வேலை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டார். 1912 ஆம் ஆண்டில், சென்னை துறைமுகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்

மதராஸ் போர்ட் ட்ரஸ்ட் அவருக்கு மாதம் ஊதியம் ரூ.25 சம்பளமாக கொடுக்கப்பட்டது. துறைமுகத்தில் வேலை செய்தாலும், அவர் கணிதத்தில் தனது ஆர்வத்தை தொடர்ந்தார். அவரது அலுவலக மேல் அதிகாரிகள் அவரது கணித திறமையை கவனித்து ஊக்குவித்தனர்.

துறைமுகத்தில் வேலை செய்த காலத்திலேயே, ராமானுஜர் தனது கணித ஆராய்ச்சிகளுக்கான மூலப்பொறிகளை உருவாக்கினார். அவரது நோட்டுப் புத்தகங்களில் எழுதப்பட்ட சிக்கலான கருத்துக்கள் அந்த காலத்தில் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

துறைமுக பணி ராமானுஜரின் வாழ்க்கையை வேறு விதமாக புரட்டிப் போட்டது. பொதுவாக துறைமுகத்திற்கு வரும் பல ஆங்கிலேயர்களின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. இவரது திறமை குறிப்பிடத்தக்க வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்தது, இது இவரை ஜி.ஹெச். ஹார்டியுடன் தொடர்பில் கொண்டு வந்த முக்கிய காரணமாக இருந்தது.

வெளிநாடு பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்ட சாதி:

ராமானுஜரின் கணித திறமைகள் மற்றும் ஆராய்ச்சிகள் ஜி.ஹெச். ஹார்டி (G.H. Hardy), பிரபல கணிதவியலாளரை ஈர்த்தது.

ஹார்டி, 1913 ஆம் ஆண்டில், ராமானுஜருக்கு கடிதம் எழுதி அவரின் கணித வாதங்களை பரிசீலனை செய்ய அழைத்தார்.

அதன்படி, ராமானுஜர் 1914 ஆம் ஆண்டு இங்கிலாந்து செல்ல முடிவெடுத்தார். ஆனால் ராமானுஜன் ஒரு பிராமணர் என்பதால் கடல் கடந்து வெளிநாடு போவதற்கு அவரது குடும்பத்தினர் அனைவரும் தடுத்தனர். இருந்தாலும் ராமானுஜத்தின் மேதா விலாசத்தையும், அறிவுத்திறனையும் உணர்ந்த துறைமுக பணியாளர்கள் ராமானுஜன் வெளிநாடு செல்வதற்கு உதவினர்.

ஜி.ஹெச். ஹார்டி - ராமானுஜன்
ஜி.ஹெச். ஹார்டி - ராமானுஜன்

இங்கிலாந்து பயணம்:

ஸ்ரீனிவாச ராமானுஜரின் இங்கிலாந்து பயணம், அவரது கணித சாதனைகளுக்கு உலகளவில் அங்கீகாரம் பெறும் ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது. இந்த பயணம் அவரது வாழ்கையை மாற்றியெறிந்தது.

1914 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ராமானுஜன் சென்னையில் இருந்து இங்கிலாந்து கப்பலில் செல்லத் தயாரானார். பல நாடுகளை கடந்து கடல் வழியாக ராமானுஜம் பயணித்தபோது நாள்தோறும் தனது குடும்ப பாரம்பரிய சடங்குகளை மேற்கொண்டார். அதோடு அவரது கவனம் முழுவதும் கணிதத் தேற்றங்களை நோக்கியே இருந்தது.

இங்கிலாந்தில், ராமானுஜர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சேர்ந்தார். ஜி.ஹெச். ஹார்டி மற்றும் ஜான் இ. லிட்டில்வுட் போன்ற பிரபல கணிதவியலாளர்களுடன் பணியாற்றினார். ராமானுஜர், கேம்பிரிட்ஜில் இருந்து 30க்கும் மேற்பட்ட புதிய கோட்பாடுகளை உருவாக்கினார். அவர் உருவாக்கிய Mock Theta Functions, Partition Theory, Modular Forms ஆகியவை நவீன கணிதத்திற்கு முக்கிய பங்களிப்புகளாக அமைந்தன. ராமானுஜர் மற்றும் ஹார்டி இணைந்து “Highly Composite Numbers” போன்ற முக்கியமான ஆய்வுகளை செய்தனர்.

ஜி.ஹெச். ஹார்டி
ஜி.ஹெச். ஹார்டி

ராமானுஜம் பிறவியிலேயே சுத்த சைவம் என்பதால் இங்கிலாந்தின் உணவு கால நிலையும் அவரது உடலை வாட்டி வதைத்தது.

புதிய உணவுகள் மற்றும் பருவநிலை காரணமாக, ராமானுஜர் உடல்நலக் குறைபாடுகளை எதிர்கொண்டார், மேலும் அவரது உடல் பலவீனமாகி விட்டது.

ஆனால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட ஐந்து ஆண்டுகள் உலக கணிதவியலுக்கு புரட்சியை ஏற்படுத்தும் வருடமாக இருந்திருக்கும் என அப்போது யாரும் கணிக்கவில்லை.

ராமானுஜன் எண் 1729 :

1918ம் ஆண்டு ராமானுஜத்திற்கு உடல்நலம் மிகவும் மோசமானது. அவரை மருத்துவமனைக்கு தினமும் சென்று விசாரிப்பதை பேராசிரியர் ஹார்டி வழக்கமாக வைத்திருந்தார். அப்போது அவர் ஒரு நாள் பயணித்து வந்த காரின் எண் 1729 என இருந்தது. ராமானுஜரை சந்தித்த ஹார்டி 1729 என்கிற எண்ணில் என்ன சுவாரசியம் இருக்கிறது எனக் கேட்க ராமானுஜமோ இது ஒரு முக்கியமான எண் வரிசையில் தொடக்கம் எனக் கூறினார்.

முதலில் ஹார்டிக்கு சுத்தமாக புரியாத நிலையில் 1729 என்கிற எண்ணின் முக்கியத்தை எடுத்துரைத்தார் ராமானுஜன், "நீங்கள் கூறிய 1729 என்பது மிகக் கூடிய ரகசியமான எண். இது இரு வெவ்வேறு வடிவங்களில் (two different ways) இரண்டு கணங்குகளுக்கு (cubes) கூட்டுதலாக எழுதக்கூடிய சிறந்த எண்."

1729 = 1^3 + 12^3 = 9^3 + 10^3

இது 1729 எனும் எண்ணின் தனிச்சிறப்பு, அது இரண்டு வேறுபட்ட முறைகளில் க்யூபுகள் கூட்டமாக எழுதப்படுவதை உணர்த்துகிறது.

இதுபோன்று இரு கணங்களை கூட்டும் எண்களின் முதல் எண்ணாக 1729 மட்டுமே உள்ளது அடுத்த எண்

4104:

4104 = 2^3 + 16^3 = 9^3 + 15^3

இதுபோல ராமானுஜத்திற்கும் ஹார்டிக்கும் இடையே சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் நடந்ததுண்டு.

மறைவு :

இங்கிலாந்தில் இருந்த போது, குளிர்ந்த பருவநிலை மற்றும் உணவு விஷயங்களின் காரணமாக உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர், இந்தியாவிற்கு திரும்பியபோது, அவரது உடல்நலம் மிக மோசமாக இருந்தது, அவர் சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்டார். 1919 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய ராமானுஜன் 26 ஏப்ரல் 1920 கும்பகோணத்தில் தனது 32 வது வயதில் மரணம் அடைந்தார்.

ராமானுஜத்தின் மறைவு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கணித துறையில் உள்ள பெரும்பாலான பேராசிரியர்கள் மாணவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் பிறந்த கும்பகோணத்திலோ பக்கத்து தெருவில் கூட அவரது அருமை தெரியாத நிலைதான் இருந்தது.

ஜானகி அம்மாள், ராமானுஜரின் மறைவுக்கு பிறகு அவரது வாழ்வை தியாகமாக வாழ்ந்தார். அவரது கணவரின் பெருமையை உலகிற்கு பரப்பியவராகவும் இருந்தார். முற்றிலும், ராமானுஜரின் திருமண வாழ்க்கை சவால்களால் நிறைந்திருந்தாலும், ஜானகி அம்மாள் அவரின் வாழ்வில் அமைதியான ஆதரவளித்த முக்கியமான பாத்திரமாகவும் இருந்தார்.

இறந்த பிறகு உயிர்த்தெழுந்தார் :

ராமானுஜரின் நோட்டு புத்தகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி கல்லூரி நூலகத்தில் இருந்தது. ஜார்ஜ் ஆண்ட்ரூஸ் 1976ம் ஆண்டு அதாவது அவர் இறந்து 56 வருடம் கழித்து அந்த புத்தகத்தை கண்டுபிடித்தார். 100 பக்கங்கள் கொண்ட அந்த குறிப்பு புத்தகம் ராமானுஜர் தனது இறுதி ஆண்டுகளில் (1919) எழுதிய பல கோட்பாடுகளை உள்ளடக்கியது. இதில் மொக் தீட்டா பங்களிப்புகள், பார்டிஷன் கோட்பாடுகள், q-சரீஸ்கள் மற்றும் மோடுலர் வடிவங்கள் போன்ற முக்கியமான கணித சமன்பாடுகளாக இருந்தது.

இந்த கோட்பாடுகளில் பலவற்றை ராமானுஜர் முறையாக நிரூபிக்கவில்லை. அதற்கு காரணமும் இருக்கிறது நாமெல்லாம் கணிதப் பாடம் படிக்கும் போது ஒவ்வொன்றையும் அடுக்கு அடுக்காக எழுதிய பழக்கப் பட்டோம். ஆனால் ராமானுஜத்தின் அதீத திறமையால் அவர் பார்த்த உடனேயே கால்குலேட்டரையும் விட வேகமாக பதில் சொல்லி விடுவார். அதனால் அவர் எழுதிய குறிப்புகள் பல கணிதவியலாளர்களுக்கு புதிராக இருந்தன. அவை பின்னர் பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

பார் கோடுக்கு அடிப்படை ராமானுஜன் தியரி :

இன்று நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கூகுள் பேவில் தொடங்கி மெட்ரோ ரயில் நிலையங்களில் பயன்படுத்தும் பார் கோடு ஏடிஎம் கார்டில் இருக்கக்கூடிய சமிக்கை எண்கள் உள்ளிட்டவற்றிற்கு அடிப்படையே ராமானுஜனின் அளவீடுகள் தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ராமானுஜரின் பார்சியல் கோட்பாடு குவாண்டம் கம்ப்யூட்டர் கண்டறிவதற்கும், அவர் உருவாக்கிய ஸ்ட்ங் தியரி விண்வெளி அறிவியலுக்கும் உதவுகிறது.

பங்குச்சந்தையில் நாம் பயன்படுத்தும் புள்ளியியல் கோட்பாட்டிற்கு அடிப்படையை நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு விட்டுச் சென்றுள்ளார் ராமானுஜன்.

இப்போது நாம் பயன்படுத்தும் இணையதள சேவையில் தொடங்கி இணைய பாதுகாப்பு, பரிணாம கணிதம் உள்ளிட்டவற்றிற்கு அடிப்படையாக ராமானுஜனின் சமன்பாடுகள் உள்ளது. ஐடி ஊழியர்களால் நாள்தோறும் பயன்படுத்தப்படும் கணித அல்காரிதம் அனைத்தும் ராமானுஜம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது தியரிகள் மூலமாக நோட்டுப் புத்தகத்தில் நிரூபித்தார். இப்போது நாம் பயன்படுத்தும் கணினிகளுக்கு ஆரம்ப கட்டமாக அவரின் கணித மாடல்களை இருக்கிறது. இப்போது கூறுங்கள் ஏன் பேஸ்புக் நிறுவனர் மார்க் ராமானுஜனை பற்றி வானளவில் புகழ்ந்து வருகிறார் என்பது புரியவரும்.

ராமானுஜம் கணிதத்தையும் எண்களையும் எவ்வாறு புரிந்து கொண்டார் :

பொதுவாக அறிவியல் உலகில் உச்சமாக இன்று கருதப்படும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தான். நூறு வருடங்களுக்கு முன்பாகவே தற்போது நாம் கண்டுபிடித்துள்ள கருந்துளையை தனது சமன்பாடுகள் மூலமாக நிரூபித்தவர். இதுவரை பிறந்த மனிதர்களிலேயே அதிக அளவில் மூளையை பயன்படுத்தியவர் ஐன்ஸ்டைன் தான் என கூறுவார்கள். அவர் தனது கணித அறிவை இசையோடு தொடர்பு படுத்தினார். ஒரு சிறந்த இசைக் கலைஞர் என்பதால் இசையில் ஏற்படக்கூடிய நுணுக்கங்களை அவர் எண்களாக பார்த்ததாக தனது பதிவேட்டில் எழுதி வைத்திருக்கிறார்.

ramanujan
ramanujan

அதேபோல ராமானுஜத்திற்கும் கணிதம் மீதும் எண்களை புரிந்து கொள்வதிலும் ஆன்மீகமே அடிப்படையாக இருந்துள்ளது. ராமானுஜன் 32 வயது வரை தான் வாழ்ந்தார் என்றாலும் அவர் வாழும் காலத்தில் நாமக்கலில் இருக்கக்கூடிய நாமகிரி தாயாரின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தன்னுடைய கனவிலும் நினைவிலும் நாமகிரி தெய்வத்தின் மீது கொண்ட ஆன்மீகத்தை எண்களாக புரிந்து கொண்டதாக ஹார்ட்டியிடம் ராமானுஜன் கூறியிருக்கிறார். ஆன்மீகத்தின் மீது பற்று கொண்டிருந்தாலும் மூடநம்பிக்கையிலோ அல்லது கடவுளின் பெயரால் ஏமாற்றுவதிலோ அவருக்கு ஆர்வம் இருக்கவில்லை. தன் கனவில் கடவுளைப் பார்த்தார் கடவுளின் மூலம் கணிதத்தைப் பார்த்தார் என அவரது கணித அறிவை குறிப்புகள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்...

கணித மேதையை கொண்டாட தவறிய இந்தியா :

ராமானுஜன் பிறந்தநாளை தேசிய கணித தினமாக இந்திய அரசு அனுசரித்துள்ளது. அவரின் பெயரில் இந்தியாவில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் கட்டிடங்கள், ஆய்வு துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சீனிவாச ராமானுஜத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான பணியில் இந்திய அரசோ தமிழ்நாடு அரசு பெரிய அளவில் மேற்கொள்ளவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. தமிழ்நாட்டில் ராமானுஜத்திற்கு என்று பொது இடங்களில் சிலை கிடையாது. அவர் வாழ்ந்த வளர்ந்த தெருகளுக்கு அவரது சூட்டப்படவில்லை.

ஆனால் கணிதம் தொடர்பாக உலகில் உச்சத்தில் இருக்கும் பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் ராமானுஜன் பற்றி தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் வருகிறார்கள். இன்னமும் அவரது சமன்பாடுகளில் 100க்கும் மேற்பட்டவை புரிந்து கொள்ளப்படவே இல்லை.

இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவை மேலும் வெளிவரும் பட்சத்தில் முன்னேறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கும் அவரது சமன்பாடுகள் தொடக்கமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. ராமானுஜன் இறந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவர் அறியப்படாத சமன்பாடாகவே இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com