’பாத்திரம் கழுவியது முதல் பத்ம ஸ்ரீ வரை..’ உத்வேகத்தின் மறுஉருவம்! யார் இந்த செஃப் தாமு?
பாத்திரம் கழுவியதில் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்றது வரை, சமையல் கலைஞர் தாமோதரனின் பயணம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு உத்வேகமாகும். சமையல் கலையில் முனைவர் பட்டம் பெற்ற இந்த சமையல் மேதை, செட்டிநாட்டின் மசாலாப் பொருட்கள் முதல் பாரம்பரிய சைவ உணவுகள் வரை தமிழ் சமையலில் தனது தேர்ச்சிக்காகப் போற்றப்படுகிறார். அவரது பேரார்வம், 24.5 மணி நேரத்தில் 617 வகை உணவுகளைச் சமைத்து கின்னஸ் உலக சாதனை படைக்க வழிவகுத்தது. சமையல் கலைஞர் தாமோதரனின் அர்ப்பணிப்பு, உள்ளூர் தமிழ் உணவுகளை உலக அரங்கில் இடம்பெறச் செய்து, அவரது புகழை காலத்திற்கும் அழியமுடியாதபடி நிலைநாட்டியுள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்றவரான சமையல் கலைஞர் செஃப் தாமு, ஒரு காலத்தில் பிழைப்புக்காக பாத்திரங்களைக் கழுவி வந்தவர் என்றால் நம்பமுடிகிறதா. தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு சிறிய ஊரில் பிறந்த செஃப் தாமு என்கிற கோதண்டராமன் தாமோதரன், தனது பயணத்தை ஹோட்டல் சமையலறைகளில் தான் தொடங்கினார். ஆனால் ஒரு சமையல்காரராக அல்ல, மாறாக பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவும் ஒரு பணியாளராகவே தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். ஆனால் சமையலறைகளில் அயராது உழைத்த அவர், சமையல் கலையில் கைத்தேர்ந்தவராக தேர்ச்சி பெற்றார். இறுதியில், அவர் சமையல் கலையில் முனைவர் (PhD) பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞராக அவதாரம் எடுத்தார். ஆனால் அதற்கு அவர் கொடுத்த விலையும், உழைப்பும், சகித்துக்கொண்ட அவமானங்களும் ஏராளமானது.
தமிழ் சமையலில் தனது தேர்ச்சிக்காகப் போற்றப்படும் தாமுவின் சிறப்புகள், அவரது நிபுணத்துவம், செட்டிநாடு சமையலின் மசாலா நிறைந்த சுவைகள், சென்னையின் புகழ்பெற்ற கடல் உணவு வகைகள் மற்றும் பல்வேறு தமிழ் சமூகத்தினரால் தயாரிக்கப்படும் சத்தான, பாரம்பரிய சைவ உணவுகள் வரை பரந்துவிரிந்துள்ளது. அவரது விரிவான சமையல் அறிவு, வலுவான தென்னிந்திய சுவை உணவுகள், காலத்தால் போற்றப்படும் சைவ சமையல் குறிப்புகள் என அனைத்தும் தமிழ்நாட்டின் வளமான மற்றும் பன்முகப்பட்ட உணவுப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது.
செஃப் தாமுவின் சாதனைகள்!
சமையலில் அபாரத் திறமை கொண்டவரான செஃப் தாமு, அணையாத பேரார்வமும் பெற்றிருந்தவர். அதனால் தான் அவருடைய கடைசிகாலம் வரை ஓய்வை ஏற்கவில்லை. அவருடைய உழைப்பிற்கு ஆகச்சிறந்த உதாரணமாக அமைந்தது, 24 மணி நேரம் 30 நிமிடங்கள் இடைவிடாமல் சமைத்து, 617 வகையான உணவுகளை தயாரித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது. அதுமட்டுமில்லாமல் 20-க்கும் மேற்பட்ட சமையல் புத்தகங்களை எழுதியுள்ளார், அத்துடன் பல்வேறு உள்ளூர் தமிழ் உணவுகளையும் உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்துள்ளார்.
சமையல் கலைத் துறையில் முறையான ஆராய்ச்சி செய்து, சமையல் கலையில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்ற முதல் இந்தியராக வரலாற்றில் இடம்பிடித்தார்.
சமையல் துறையில் இவரது அசாத்திய பங்களிப்பைப் பாராட்டி, லண்டனில் உள்ள சவுத் ஏசியன் அசோசியேஷன் (South Asian Association) இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) வழங்கி கௌரவித்தது.
இறுதியாக கடந்த 2025-ஆம் ஆண்டில், தனது 70-வது வயதில், சமையல் கலைத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு.
இதற்குபிறகும் உழைப்பை நிறுத்தாத செஃப் தாமு, காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் மக்களை மகிழ்வித்துக்கொண்டிருந்தார்.
எப்போது சமைக்கும் ஆர்வம் பிறந்தது?
பேட்டி ஒன்றில் சமையல் கலை மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த செஃப் தாமு, என் அம்மா கோதைநாயகம்தான் முதல் காரணம். அவர் கைப்பக்குவத்தில் தயாரான உணவுகள்தான் என் நாவிற்கு சுவை என்றாலே என்ன என தெரிய வைத்தது. அவர் மீன் குழம்பு, பழைய சாதம், பச்சைப் பட்டாணியுடனான மட்டன் குருமா, சிறுதானிய உணவுகள் என அனைத்திலும் ருசியில் அசத்துவார்.
சந்தித்த அவமானங்கள்!
நான் கேரியரை தொடங்கிய காலத்தில் ‘செஃப்’ என்று சொல்லமாட்டர்கள். சமையல்காரர் என்றுதான் சொல்வார்கள். அது என்னைக் கொஞ்சம் காயப்படுத்தும். சமையல்காரர் என்று சொல்வது தவறில்லை. அதேநேரத்தில், அதைத் தாண்டி நாம் படித்திருக்கிறோம் என்பதால் நம்மைக் குறைத்து கூறுவதுபோல இருக்கும். கேட்டரிங் துறை பற்றி நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அது, தீண்டத்தகாத துறைபோலதான் இன்றும் இருக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும் என்று நினைக்கிறேன் என பேட்டில் ஒன்றில் தெரிவித்திருந்தார் தாமு.
சாதித்த தருணம் எப்படி இருந்தது?
பேட்டி ஒன்றில் பேசிய செஃப் தாமு, ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அதனால் 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தேன். இதற்காக சான்றிதழ் வாங்கியபோது தேசியக் கொடியைப் பிடித்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. தவிர, மனிதனாகப் பிறந்ததற்கான பிறவிப்பயனை அடைந்ததுபோன்று உணர்ந்தேன். கின்னஸ் புத்தகத்தில் என்னுடைய பெயரையும் புகைப்படத்தையும் பார்த்தபோது, 'சாதிச்சிட்டடா தாமு..’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன் என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
மேலும் தமிழக முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தின் உணவுப் பட்டியலை மேம்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

