'வருவாய் உபரி'-யில் இருந்து 'வருவாய் பற்றாக்குறை'... நிதி நிலையில் தமிழகத்தின் கதை!

'வருவாய் உபரி'-யில் இருந்து 'வருவாய் பற்றாக்குறை'... நிதி நிலையில் தமிழகத்தின் கதை!
'வருவாய் உபரி'-யில் இருந்து 'வருவாய் பற்றாக்குறை'... நிதி நிலையில் தமிழகத்தின் கதை!

2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியை மாநில அரசுகளுக்கு பங்கீடு செய்ய என்.சிங் தலைமையில் 15-ஆவது நிதிக் குழு அமைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தது. இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில், 15-வது நிதிக்குழு சார்பில் மத்திய - மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வுகள் தொடா்பாக பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டின்படி, 2021 முதல் 2026-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நாட்டின் மொத்த வருவாய் ரூ.135.20 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் செஸ், கூடுதல் வரி, வரி வசூலுக்கான செலவு போன்றவை மத்திய அரசுக்கு வழங்கப்படும். இதுபோக மீதமிருக்கும் ரூ.103 லட்சம் கோடி மத்திய - மாநில அரசுகளிடையே பகிர்ந்து கொள்ளப்படும்.

இதில் 42 சதவீதம் மாநிலங்களுக்கும், மீதி மத்திய அரசு பங்கிட்டுக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த 42 சதவீத பங்கீட்டில் அண்மையில் உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசத்திற்கு 1 சதவீதம் நிதியை பிரத்யேகமாக ஒதுக்கவும், மீதியுள்ள 41 சதவீத நிதியை மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாநிலங்களுக்கு 2021 முதல் 2026 வரையில் மொத்தம் ரூ.42.2 லட்சம் கோடி கிடைக்கும். இதில் ரூ.10.33 லட்சம் கோடி மானியமும் அடங்கும். மேலும், குறிப்பாக மின்துறை, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் மாநில அரசுகள் நேரடிப் பணப் பரிவா்த்தனை அடிப்படையிலேயே மானியங்களை வழங்க வேண்டும் எனவும் நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த வகையில் தமிழகத்துக்கு மானியத்துடன் கூடிய ரூ.2.12 லட்சம் கோடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதி நிலைமை!

இதற்கிடையே, "வருவாய் உபரி" மாநிலமாக இருந்த தமிழகம், 2012-13-க்குப் பிறகு "வருவாய் பற்றாக்குறை" மாநிலமாக மாறியது. வருவாய் வருமானத்தை விட, வருவாய் செலவினம் அதிகமாக இருந்தால், அதுவே வருவாய்ப் பற்றாக்குறை ஆகும். மேலும், அரசாங்கத்தின் வருவாய் அதன் அன்றாட செயல்பாட்டு செலவுகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்பதையே இது பிரதிபலிக்கிறது.

தமிழகத்தின் கடன் - மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜி.எஸ்.டி.பி) விகிதம் 2018-19ல் 22.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2012-13-ல் 17.2 சதவீதமாக இருந்தது என்று நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் நிதி குறிகாட்டிகள் 2012-13 முதல் 2018-19 வரை கடுமையாக மோசமடைந்துள்ளன. குறிப்பாக, சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலான கடன்கள் மூலதன செலவினங்களுக்கு பதிலாக அதன் வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்ய சென்றுள்ளன என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 15-வது நிதி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும், தமிழக அரசு தனது நிதி பொறுப்பு பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டத்தை நடைமுறைப்படுத்தியது மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை கடைபிடித்தது. இது நம்பகமான கடன் பாதையில் தொடர வேண்டும் என்பதையும், எதிர்கால வருமான ஓட்டங்களை உருவாக்குவதற்கான செலவினங்களை கவனமாக அளவீடு செய்ய வேண்டும் என்பதையும் உணர்த்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே அறிக்கையின்படி, சமீபத்திய ஆண்டுகளில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை - நிதி பற்றாக்குறை விகிதம் 50%-ஐ நெருங்கியுள்ளது. இதன் மூலம் பெரும்பாலான கடன்கள் அதன் வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்ய பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது. மூலதன செலவினம் - ஜி.எஸ்.டி.பி விகிதம் 2011 மற்றும் 2019-க்கு இடையில் குறைந்துவிட்டது (2016-17 தவிர, உதய் திட்டத்தில் அரசு இணைந்தபோது). சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மூலதன செலவு செலவிடப்படுகிறது.

குறைந்த வளர்ச்சி

2014-16 ஆம் ஆண்டில் தமிழகம் முக்கிய வருவாய் ஆதாரங்களில் (வாட், ஸ்டாம்ப் டூட்டி மற்றும் பதிவு மற்றும் மாநில கலால்) குறைந்த வளர்ச்சியை சந்தித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் விளைவாக (பெட்ரோலிய பொருட்களின் மீதான வாட் அதிகரிப்பு, கலால் வரி உயர்வு மற்றும் மதுபானத்திற்கு சிறப்பு கட்டணம் வசூலித்தல் போன்றவை), மாநில அரசு தனது சொந்த வரி வருவாயில் 13% வளர்ச்சியையும், 2018-19 ஆம் ஆண்டில் சொந்த வருவாய் வருமானங்களில் 15% வளர்ச்சியையும் அடைந்துள்ளது.

மீன்வளர்ப்பை மேம்படுத்துவது தமிழ்நாடு மாநிலத்திற்கு ஒரு முக்கியமான வருவாய் ஈட்டக்கூடியதாக மாறும் என்றும் ஆணையம் கூறியது. சுமார் 1,076 கி.மீ கடலோரப் பகுதி இருந்தபோதிலும், அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்துடன் ஒப்பிடும்போது மாநிலத்தின் மீன்வளர்ப்புத் துறை சிறியது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், வறுமை குறைப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மற்றும் தரமான கல்வி போன்ற நிலையான அபிவிருத்தி இலக்குகளில் பல அளவீடுகளில் தமிழக அரசு முன்னணியில் உள்ளது என்று அறிக்கையில் அரசின் நேர்மறையான விஷயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com