இடுக்கியில் ஏற்றம் பெறாத ஏலக்காய் விலை... வேதனையில் விவசாயிகள்!

இடுக்கியில் ஏற்றம் பெறாத ஏலக்காய் விலை... வேதனையில் விவசாயிகள்!
இடுக்கியில் ஏற்றம் பெறாத ஏலக்காய் விலை... வேதனையில் விவசாயிகள்!

கேரள மாநிலம் இடுக்கி மற்றும் தமிழகத்தின் போடிநாயக்கனூரில் ஏலக்காய் ஏலம் துவக்கப்பட்டும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏலக்காய் விலை ஏற்றம் பெறாததால் ஏலக்காய் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இடுக்கியில் ஒரு கிலோ ஏலக்காய் அதிகபட்சமாக 1,500 ரூபாய்க்கும் சராசரியாக 950 ரூபாய்க்கும் விற்பனை ஆகின்றது.

இடுக்கி மாவட்டத்தின் பிரதான தொழில்களில் முதன்மையானதாக ஏலக்காய் விவசாயம்தான். கொரோனா ஊரடங்கால் அங்கு கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏலக்காய் விற்பனை முடங்க ஆரம்பித்தது. அப்போது இரு மாநில எல்லைகளும் அடைக்கப்பட்டதால் தமிழக ஏலக்காய் வியாபாரிகள் வருகை குறைந்து, தமிழக பணியாளர்கள் கேரளாவிற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏலக்காய் ஏல மையங்கள் மூடப்பட்டன. சில நாட்கள் இடைவெளிக்குப்பின் அவ்வப்போது ஏலக்காய் ஏலம் நடத்தப்பட்டாலும் எதிரபார்த்த அளவு வியாபாரிகள் பங்களிப்பது குறைந்தது. அப்படியே வியாபாரிகள் ஏலக்காயை வாங்கினாலும், வெளிநாட்டு ஏற்றுமதி முடங்கியதால் அவர்களால் ஏலக்காயை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு ஏலக்காய் தேக்கம் அடைந்தது. தொடர்ச்சியான இந்த சிக்கல்களால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏலக்காய் கிலோ 1,200 ரூபாய்க்கும் கீழேயே இருந்தது.

இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் புற்றடி மற்றும் தமிழகத்தின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் ஒருநாள் விட்டு ஒரு நாள் ஏலக்காய் ஏலம் துவக்கப்பட்டது. இதையடுத்து ஏலக்காய் விலை ஏற்றம் பெறும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு ஏலக்காய் ஏற்றுமதி நடக்காததால் ஏலக்காய் வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டியுள்ளனர். இதனால் தற்போது ஏலக்காய் கிலோ அதிகபட்சமாக 1,500 ரூபாய்க்கும், சராசரியாக கிலோ 950 ரூபாய்க்கும் விலை போகிறது. இந்த அதிகபட்ச விலை என்பது 8mm என்ற நீளமான ஏலக்காய்க்கான விலையாகும். இது பெரும்பாலும் விவசாயிகளிடம் இருப்பதில்லை. மொத்த வியாபாரிகளிடம் ஏலக்காய்களை வாங்கி இந்த 8 mm ஏலக்காய்களை பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி பிரித்தெடுத்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். ஆயிரம் கிலோ ஏலக்காயை பிரித்தால் அதிகபட்சமாக 10 கிலோ 8 mm ஏலக்காய் கிடைக்கும். கிடைக்காமலும் போகலாம். எனவே அதிகபட்ச விலை என்பது விவசாயிகளுக்கு பொருந்தாது. சராசரி விலை மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இதனால் ஏலக்காய் விலை விவசாயிகளை பொறுத்தளவில் ஒரு கிலோ 1000 ரூபாய்க்கும் கீழே விலை போவதாகவே கணக்கிடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே நிலையே நீடிக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு விவசாயிகளுக்கு ஒரு கிலோ ஏலக்காய் சராசரி விலையாக ஆயிரம் ரூபாய் கிடைத்த நிலையில், இரண்டாண்டுகளாக ஆயிரத்திற்கும் கீழே ஒரு கிலோ ஏலக்காய் விலை போவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் இடுக்கி ஏலக்காய் விவசாயிகள் மட்டுமின்றி, இடுக்கியில் அதிக ஏலத்தோட்டங்கள் வைத்திருக்கும் தமிழக விவசாயிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர். நாளாக நாளாக ஏலக்காய் அதிக இருப்பில் இருக்கும் நிலையில், விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது ஏலக்காய் விவசாயிகளை மேலும் வருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது.

- ரமேஷ் கண்ணன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com