சென்னை முதல் விருதுநகர் வரை.. தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை

சென்னை முதல் விருதுநகர் வரை.. தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை
சென்னை முதல் விருதுநகர் வரை.. தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஏற்பட்டுள்ளதால் செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

சென்னை:

சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம் ,ஆவடி ,அம்பத்தூர் ,கேகே நகர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கத்தில் 45 நிமிடங்களில் 5 செமீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புழலில் 8 செண்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் கூறியுள்ளது. முன்னதாக சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், வட உள் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கரூர்:

கரூர் மாவட்டம், குளித்தலை லாலாபேட்டை பணிக்கம்பட்டி மேட்டு மருதூர் தோகைமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், சாலையோர வியாபாரிகள் வியாபாரம் மலையால் தடைபட்டுள்ளது என வருத்தம் தெரிவிக்கின்றனர், பணிக்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நடப்பதற்கு வழியின்றி தண்ணீரில் நடந்து செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற மழைக்காலங்களில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனகள் ஆளாவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர், சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், தொடர்ந்து பெய்யும் மழை விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என கூறுகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி.

அருப்புக்கோட்டையில் இன்று அதிகாலை முதலே அருப்புக்கோட்டை பாலையம்பட்டி, ஆத்திபட்டி , சொக்கலிங்கபுரம் , புளியம்பட்டி , ராமசாமிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்த நிலையில் காலை வேளையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. தொடர்ச்சியாக விட்டுவிட்டு மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

காலையில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குமரன் புதுத்தெரு , காந்தி மைதானைம் , டெலிபோன் ரோடு , சொக்கலிங்கபுரம் , விருதுதகர் ரோடு உள்ளிட்ட நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீரோடு கலந்து சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். போக்குவரத்து அதிமுள்ள சாலைகளில் மழைநீர் செல்ல வழியின்றி சாக்கடைநீரோடு குளம் போல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அறுவெறுப்புடன் அப்பகுதிகளை கடந்து சென்றனர். மேலும் சாலைகளில் உள்ள மேடுபள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் தவறி விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.பல இடங்களில் வீடுகளின் முன்பு சாக்கடை நீர் தேங்கியிருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. முறையான திட்டமிடல் இன்றி சாலை அமைப்பதே இதுபோன்று சிரமத்திற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

செங்கல்பட்டு:

நேற்று மாலை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. இதனை தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் திடீரென மதுராந்தகம், மேல்மருவத்தூர், ராமாபுரம், அச்சிறுபாக்கம், ஒரத்தி, ஆத்தூர், மற்றும் செய்யூர் சித்தாமூர் சூனாம்பேடு இடைக்கழிநாடு, படாளம் அதன் சுற்றுப்பகுதியில் மழை பெய்தது.

இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஊர்ந்து செல்கின்றன. இந்த மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியடந்துள்ளனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழைபெய்துவருகிறது. மழையால் காலைமுதலே குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது.

நள்ளிரவுமுதல் மழை வருவது போன்ற சூழல் உருவாகியது மின்னல் வெட்டியது. அதிகாலை முதல் வேப்பந்தட்டை எசனை உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்ய தொடங்கியது. அதைத்தொடர்ந்து பெரம்பலூர் நகர்பகுதியிலும் மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக மிதமான மழை பதிவானது. தொடர்ந்து மழை பெய்துவருகிறது. வானம் மேகமூட்டத்துடன் கானப்பட்டுவருகிறது.காலைமுதலே மழை பெய்துவருவதால் குளிர்ச்சியான சூழல்நிலவிவருகிறது.மழையை எதிர்பார்த்திருந்த மானாவாரிபயிர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது இந்நிலையில் நள்ளிரவு முதல் ஈரோடு மொடக்குறிச்சி, ரங்கம்பாளையம், கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.மேலும் நேற்று மொடக்குறிச்சியில் 31 மில்லி மீட்டரும் ஈரோட்டில் 42 மில்லி மீட்டர் என மழையளவு பதிவாகியுள்ளது.மேலும் மாவட்டத்தின் நேற்றைய மொத்த மழையளவாக 97.4 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது.தற்போது ஈரோட்டில் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று அதிகாலை முதல் திருச்செங்கோடு குமாரபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த்து தொடர்ந்து 2 மணி நேரங்களுக்கும் மேலாக பெய்து வரும் மழையினால் திருச்செங்கோடு நகர பேருந்து நிலையம் அருகே உள்ள சங்ககிரி சேலம் செல்லும் பிரதான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல திரண்டு சாக்கடை நீருடன் கலந்து கரைபுரண்டு ஓடி வந்த நிலையில் காலை 8 மணிக்கு மேல் அரை மணி நேரத்தில் மழை சற்று குறைந்த அளவே செய்த சமயத்தில் வெல்லம் அரை மணி நேரத்தில் வடிய தொடங்கியது இதனை அடுத்து பிரதான சாலைகள் வழக்கமான செயல்பாட்டுக்கு வந்தன

வரும் காலங்களில் இது போன்று சாக்கடை நீர் மழை பெய்யும் நேரங்களில் சாலைகளில் தேங்கி நிற்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து கடும் வெயில் இருந்து வந்த நிலையில் இந்த கனமழை பூமியை குளிர்வித்து மக்களை மகிழ்வித்து உள்ளது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகாலை முதலே பரவலாக மழை தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாலை நேரங்களில் விட்டுவட்டு லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இன்று அதிகாலை முதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சராப்பாளையம் உளுந்தூர்பேட்டை சின்னசேலம் தியாகதுருகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறதுஇந்த மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பும் நிலை ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் மேலும் தொடர் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் மேலும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருவதை அடுத்து நகரம் மற்றும் கிராம பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது

புதுச்சேரியில் நகர பகுதிகளான உப்பளம், உருளையான்பேட்டை, முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, சாரம் உள்ளிட்ட பகுதிகள் காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது, அதே போல் கிராம் பகுதிகளான திருக்கனூர், அரியாங்குப்பம், கன்னியகோயில், காலாபட்டு, மதகடிப்பட்டு ஆகிய பகுதிகளிலும் காலை முதலே பரவலாக மழை பெய்து வருகின்றது, காலை முதல் பெய்து வரும் இந்த மழையினால் தாழ்வான சில பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது, மேலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தினால் வெப்பம் அதிகரித்து இருந்த நிலையில், இந்த திடிர் மழையால் புதுச்சேரி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகின்றது.

விழுப்புரம், செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. செஞ்சி மற்றும் மேல்மலையனூர், அவலூர்பேட்டை, ஆலம்பூண்டி, சத்தியமங்கலம், ஆனந்தபுரம் ,அப்பம்பட்டு, நாட்டார்மங்கலம் ஆகிய பகுதிகளில் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது இதனால் அனைத்து பகுதிகளிலும் குளிர்ந்த காற்றுடன் வானம் இருண்டு காட்சி அளிக்கிறது.

தொடர் மழையின் காரணமாக குளம் கண்மாய் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது இதனால் விவசாய பெருங்குடி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் மேலும் செஞ்சி பேருந்து நிலையத்தில் அதிகாலையிலிருந்து மழை பெய்ததால் பேருந்து நிலையம் குளம் போல் காட்சி அளித்தது இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர் செஞ்சி காந்தி பஜார் வீதிகளிலும் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீர் குளம் போல் ஓடியது செஞ்சி பேரூராட்சி ஊழியர்கள் வாய்க்கால் அடைப்பு சுத்தம் செய்யும் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது வெப்பத்தின் காரணமாக அனல் காற்று வீசத்தொடங்கியது இதனால் விவசாயிகள் சம்பா பயிர் தொடங்கலாமா வேண்டாமா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு மழை வராமல் வெயிலின் தாக்கம் அதிகமாகயுள்ளது

இந்நிலையில் இன்று காலை முதல் கடலூர் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது இது விவசாயிகளுக்கு சற்று நிம்மதியைத் தந்துள்ளது ஆனாலும் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் இன்னும் வறண்டுதான் காணப்படுகிறது ஒருசில ஏரிகளில் தண்ணீர் இருந்தாலும் அதனை பயன்படுத்த முடியாத நிலைதான் விவசாயிகளுக்கு உள்ளது மழை தொடர்ந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு நம்பிக்கை பிறக்கும் என்று விவசாயிகள் காத்திருக்கிறார்கள் .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com