5 ரூபாய் டாக்டர் முதல் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வரை.. மருத்துவர் ராமதாஸ் கடந்து வந்த பாதை!

தான் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியிருப்பதைக் கண்டவர், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை ஒருங்கிணைத்து, 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.
மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்Twitter

”நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அதை விட சிறந்த மகிழ்ச்சி இல்லை... நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால் அதை நினைத்து முடங்கி விடத் தேவையில்லை.

'தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்' - என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப வெற்றிகளை சாத்தியமாக்க அனைவரும் கடுமையாக உழைப்போம். அரசியல் இலக்கை அடைவோம் என்று  அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்”

- தனது 85வது பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவர் ராமதாஸ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வார்த்தைகள் இவை.

தமிழ்நாட்டில் ஆட்சி என்ற இலக்கிற்கு இன்னும் எத்தனை காலம்?

`தமிழ்நாட்டில் ஆட்சி என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?’ என்கிற கேள்வியை எழுப்பி அதற்குப் பதிலாக இதைப் பகிர்ந்திருக்கிறார். மருத்துவராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பா.ம.க என்கிற அரசியல் கட்சியைத் தொடங்கி தமிழக அரசியல் களத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தவர் மருத்துவர் ராமதாஸ். பல்வேறு விமர்சனங்கள் அவர்மீது முன்வைத்தாலும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் அவர். அவர் கடந்து வந்த பாதையைப் பார்ப்போம்..

Dr. S. Ramadoss
Dr. S. Ramadoss

1939-ம் ஆண்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, கீழ்சிவரி என்னும் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராமதாஸ். பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்த அவர், ஆசிரியர்களின் உதவி, உறவினர்களின் உதவியோடுதான் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தார். முதலில், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கத் தொடங்கிய ராமதாஸ் சில ஆண்டுகளில், க்ளினிக் தொடங்கி குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். தவிர,  தன்னிடம் மருத்துவம் பார்க்கவரும் ஏழை மக்களுக்கு பேருந்துக்குகூட பணம் கொடுத்து உதவுமளவுக்கு மனிதாபிமானமிக்கவராகவும் திகழ்ந்தார். அந்தப் பகுதியில், 5 ரூபாய் மருத்துவர், கைராசியான டாக்டர் என பெயரெடுத்தார் மருத்துவர் ராமதாஸ். 

5 ரூபாய் டாக்டர் – வன்னியர் சங்கம் – பாட்டாளி மக்கள் கட்சி

அதோடு, காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு முற்போக்குச் சிந்தனையும் சமூக நீதிப் பார்வை கொண்டவராகவும் விளங்கி வந்தார். அப்படி மருத்துவம் பார்க்கும்போது, தான் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியிருப்பதைக் கண்டவர், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை ஒருங்கிணைத்து, 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். தொடர்ந்து அந்த அமைப்பு வன்னியர் தனி இடதுக்கீட்டுக்காகப் பல ஆண்டுகள் போராடியது. அனைத்துப் போராட்டங்களையும் ஒருங்கிணைத்தவர் மருத்துவர் ராமதாஸ்தான்.

Dr. S. Ramadoss
Dr. S. Ramadoss

அந்த போராட்டங்கள், 21 உயிர்கள் பலியானதன் விளைவாக 1989-ல் கருணாநிதி முதல்வரான பிறகு, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளைத் தனியாகப் பிரித்து எம்.பி.சி பிரிவை உருவாக்கினார். இதற்கு வன்னிய சமூகத் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்தபோதும், மருத்துவர் ராமதாஸ், மிக்கடுமையாக விமர்சித்தார். வன்னியர் சங்கத்தின் பிரிவாக அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்து, 1989 ஜூலை 16-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கினார். தேர்தல் அரசியல் களத்தில் அந்தக் கட்சி பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்திருக்கிறது. தற்போது ஐந்து எம்.எல்.ஏக்கள் அந்தக் கட்சிக்கு சட்டமன்றத்தில் இருக்கிறார்கள். கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார்.

தமிழர் உரிமையை நிலைநாட்டிய போராட்டங்கள்!

தேர்தல் அரசியலைத் தாண்டி, தனது அரசியல் பயணத்தின் ஆரம்ப காலகட்டத்தில் `தமிழர் வாழ்வுரிமை மாநாடு' , ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேரணி, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என  தமிழ்மொழி, தமிழர்களின் உரிமை சார்ந்த முன்னெடுப்புகளையும் செய்து வந்தார் மருத்துவர் ராமதாஸ். கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகளில் இஸ்லாமிய மக்களுக்கு இருந்த சில நெருக்கடிகளை உடைத்து இஸ்லாமிய மக்களின் ஆதரவையும் பெற்று செல்வாக்குமிக்க தலைவராக வலம் வந்தார்.

தன் கட்சியிலும் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர்தான் பொதுச் செயலாளராக வரமுடியும் என்ற விதியைக் கொண்டு வந்தார். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் அதிகமான அம்பேத்கர் சிலைகளைத் திறந்தது, சமச்சீர் கல்வி, மது ஒழிப்புக்கு ஆதரவான போராட்டங்கள், மாநில உரிமை சார்ந்த போராட்டங்கள், கருத்துப் பிழைகள் இல்லாத அறிக்கைகள், 2002-2003-ம் நிதி ஆண்டில் தொடங்கி தொடர்ந்து வெளியிடப்படும் நிழல் நிதி நிலை அறிக்கைகள், 2008-2009-ம் நிதி ஆண்டில் தொடங்கி வெளியிடப்படும் வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கைகள், சுகாதாரம் சார்ந்து கொண்டுவரப்பட்ட  திட்டங்கள் ஆகியவை பா.ம.கவின், மருத்துவர் ராமதாஸின் சாதனைகளாகப் பார்க்கப்படுகின்றன.

Dr. S. Ramadoss
Dr. S. Ramadoss

அதேவேளை, திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணியே இல்லை எனச் சொல்லிவிட்டு, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பா.ம.கவின், மருத்துவர் ராமதாஸின் மீது முன்வைக்கப்படும் முக்கியமான விமர்சனமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாது, வட தமிழகத்தில் நிகழும் சாதியக் கலவரங்களுக்கு பின்புலத்தில் இருப்பது பா.ம.கதான் என்று விமர்சிக்கப்படுவது; தன் குடும்பத்தில் இருந்து யாரும் கட்சிப் பதவிக்கோ ஆட்சிப் பதவிக்கோ வரமாட்டார்கள் எனச் சொல்லிவிட்டு தன் மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது, கட்சிக்குத் தலைவராக்கியது,  2012-2014 காலகட்டத்தில், பா.ம.க முன்னெடுத்த அனைத்து சமுதாயக் பேரமைப்பு எனும் செயல்பாடு உள்ளிட்டவை பாமகவின் மீது, மருத்துவர் ராமதாஸின் மீது முன்வைக்கப்படும் முக்கியமான விமர்சனங்களாக இருக்கின்றன.

எல்லாவற்றையும்தாண்டி இந்த வயதிலும் தமிழைத்தேடிய பயணம், அரசியல் நிகழ்வுகளுக்கு உடனடி ரியாக்‌ஷனாக அறிக்கைகள் என சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார் மருத்துவர் ராமதாஸ்.

- இரா.செந்தில் கரிகாலன்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com