அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு: மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றிய மக்கள்
சாயல்குடி அருகே மின்வாரியத்தை கண்டித்து மின்கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள எம்.மாரியூர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பலமுறை மின்சார வாரியத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.
இவ்வாறு கடந்த இரண்டு மாதங்களாக எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி அதிகாலை, மாலை மற்றும் நள்ளிரவு என எந்நேரமும் மின்வெட்டு ஏற்படுவதாகவும், இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை எனவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். காலாண்டு தேர்வு தொடங்கியுள்ள நிலையில் மின்வெட்டு காரணமாக பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் அதிகாலை எழுந்து தொழுகைக்காக வரும் பெரியவர்கள் மின்தடையினால் இருளில் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும் கூறுகின்றனர்.