சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு...!
ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளை வெகுவாக பாதித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1623 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 662 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஊரடங்கால் ஆதரவற்றோர் உணவுக்கு வழியின்றி தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். உணவு உண்ண வரும் பொதுமக்களிடம் இடம் பெயர், தொலைப்பேசி எண் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு இலவசமாக உணவு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.