இலவசமாக எலிசா பரிசோதனை: டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை!
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறித்த எலிசா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு ரத்த மாதிரிகள் இலவசமாக எடுக்கப்பட்டு எலிசா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் டெங்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி மற்றும் ரத்தக்கசிவு இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைய அணுகி டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனையை செய்து கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைப்போல் அனைத்து மாவட்டங்களிலும் இலவச டெங்கு பரிசோதனை செய்தால், காய்ச்சலால் தொடர்ந்து பலியாகும் உயிர்களைப் பாதுகாக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.