மத்திய கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு

மத்திய கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு
மத்திய கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு

மத்திய கூட்டுறவு வங்கியில் சிறுவணிகர்கள் கடன் பெயரில் முறைகேடு மற்றும் கையாடல் நடந்திருப்பது‌ தெரியவந்துள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கிக்கிளை ஒன்றில், தனிநபர் பிணையத்தின் அ‌டிப்படையிலான சிறு வணிகர் கடன், ஓராண்டில் வழங்க அனுமதிக்கப்பட்ட தொகையை விட இருமடங்கு அதிகமாக ஐந்தே மாதங்களில் முறைகேடாக ஒரே நபருக்கு வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற ஆய்வில், ஒருவருடைய ஆதார் எண், நிரந்தர கணக்கு எண், முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி மற்றொரு நபருக்கு சிறுவணிகர் கடன் வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், அந்தக்கடன் தொகை ஈடு ரசீது மூலம் மற்றொரு கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டு கையாடல் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதனையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், “நவம்பர் 1ஆம் தேதி முதல் கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் மூலம் கடன் பெற்ற ஒவ்வொரு கடன்தாரருக்கும் 15 நாட்களுக்குள், கடன் தொகை, திருப்பி செலுத்த வேண்டிய தேதி போன்ற விவரங்களை பதிவஞ்சலில் அனுப்பி, அதற்கான ரசீது மற்றும் ஒப்புகை அட்டையை தனியே பாதுகாக்க வேண்டும். 

கடன்தாரர் குறிப்பிட்ட முகவரியில் இல்லையென திரும்பி வரப்பெற்ற பதிவஞ்சல்கள் மீது மிகுந்த கவனம் செலுத்தி கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே குடும்ப அட்டையிலுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு கடன் வழங்கக்கூடாது, திருப்பி செலுத்தும் திறனைப்பொறுத்து கடன் வழங்கிட வேண்டும். தவணை தவறிய கடன்களை குழு அமைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை 100 சதவீதம் ஆய்வு செய்து, உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாத அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள‌ வேண்டும்” எனப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

கடன் வழங்குதல் தொடர்பாக பின்பற்ற வேண்டிய 14 விதிமுறைகளும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி கடன் மேலாண்மை இயக்குநர், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு கடிதமாக அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com