ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை விவகாரம்: அவதூறு கருத்தை பதிவிட்டதாக சாட்டை துரைமுருகன் கைது

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை விவகாரம்: அவதூறு கருத்தை பதிவிட்டதாக சாட்டை துரைமுருகன் கைது
ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை விவகாரம்: அவதூறு கருத்தை பதிவிட்டதாக சாட்டை துரைமுருகன் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதை அவதூறாக சித்தரித்து பதிவிட்டதாக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

கடந்த புதன்கிழமை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட சிலருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 175 பேர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது உடல்நிலை குறித்த விபரங்களை தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பணிக்கு வந்த சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம் பகுதியில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து விடுதியில் தரமற்ற உணவு வழங்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மன உளைச்சலடைந்த தொழிலாளர்களுக்கு ஒருவாரம் ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து யூடியுபர் சாட்டை துரைமுருகன் ஆவேசமாக பேசி சர்ச்சை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் சாட்டை துரைமுருகன் மீது, இந்திய தண்டணை சட்டம் 505, 153a பிரிவுகளின் கீழ், தவறான செய்தியை பரப்புவது, கலவரம் உண்டாக்குவது உள்ளிட்ட பிரிவுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் திருச்சி பிராட்டியூர் அருகே உள்ள சாட்டை அலுவலகத்திற்கு நேற்று (19.12.2021) மாலை 4 மணிக்கு வந்த போலீசார், துரைமுருகனை கைது செய்து காஞ்சிபுரத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், திருச்சி மாநகர காவல்துறை புலனாய்வு பிரிவு உதவி ஆணையரிடம், சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருச்சி பிராட்டியூர் அருகே உள்ள சாட்டை அலுவலகத்திற்கு போலீசார் என சொல்லிக்கொண்டு வந்த 7 பேர் எனது கணவர் சாட்டை துரைமுருகனை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்களிடம் இருந்து எனது கணவரை மீட்டுக் கொடுக்குமாறும், எனது கணவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com