‘காய்ச்சல் பாதித்த 60 பேரில் 4 பேருக்கு டெங்கு’ - திருவாரூர் நிலவரம்
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள 60 பேரில் 4 பேருக்கு டெங்கு அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். அரசு சார்பில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 60பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் திருவாரூரை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் காய்ச்சல் பிரிவில் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டுமென ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். காய்ச்சலுக்கு தேவையான அனைத்து மருந்து பொருட்களும் அரசு மருத்துவமனைகளில் இருப்பதாகவும் தெரிவித்தார்.