சென்னை | எஸ்ஐஆர் பணியில் தொடரும் குளறுபடி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்ததாக நீக்கம்!
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்ட 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இறந்ததாக நீக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது. முதற்கட்ட பணிகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், பெயர் விட்டுப்போனவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதற்கட்ட பணிகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி, 1 லட்சத்து 68 ஆயிரத்து 825 பேர் விண்ணப்பித்துள்ளனர். படிவம் 6 மற்றும் 6ஏ மூலம், இவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கத்திற்காக, ஆயிரத்து 211 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது, டிசம்பர் 24ஆம் தேதி இரவு 8 மணி வரையிலான தரவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டவர்கள், தங்கள் பெயரை மீண்டும் சேர்க்க, ஜனவரி 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்தசூழலில் எஸ்.ஐ.ஆர் பட்டியலில் நடைபெறும் குளறுபடிகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே மாதாவரம் பகுதியில் வயது குறைவானவர்கள் அதிகளவில் இறந்ததாக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மற்றுமொரு குளறுபடி தெரியவந்துள்ளது.
4 பேர் இறந்ததாக நீக்கம்..
சென்னை மாதவரத்தை தொடர்ந்து மாடம்பாக்கத்திலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்ததாகக் கூறி, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்நீக்கம் செய்யப்பட்டுள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் வெங்கட் பாஸ்கரன் உட்பட அவரது குடும்பத்தினரின் பெயர் இறந்தோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர். அனைத்து தேர்தல்களிலும் வாக்குரிமை வழங்கப்பட்டு வந்த நிலையில், இறந்தோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக வெங்கட் பாஸ்கரன் குற்றம்சாட்டியுள்ளார்.

