தீப்பிடித்து ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் பலி.. கொலையா..? தற்கொலையா..?
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
திருக்கோவிலூர் அருகேயுள்ள கீழகொண்டூரில் குடிசை வீடு ஒன்றில் இருந்து இன்று அதிகாலை திடீரென புகை கிளம்பியது. தீப்பற்றியது அறிந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆயினும் தீயில் சிக்கி, தாய் தனலெட்சுமி மற்றும் அவரது மூன்று குழந்தைகளான விஷ்ணுவர்தன்,கமலேஸ்வரன் மற்றும் ஒருவயது குழந்தை ருத்ரன் ஆகியோர் உயிரிழந்தனர்.
தீ அணைக்கப்பட்ட பின் 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. தீப்பற்றிய வீட்டில் மண்ணெண்ணெய் கேன்கள் இருந்தன. கணவருடன் கோபித்துக்கொண்டு மாமனார் வீட்டுக்கு தனலட்சுமி வந்திருந்தார். அதிகாலையில் டீ வாங்கிவர மாமனார் வெளியே சென்று திரும்பியபோதுதான், வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அவரின் கூச்சல்கேட்டே அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்துள்ளனர்.
4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீவிபத்து ஏற்பட்டது எப்படி? தனலட்சுமி குந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் அரகண்டநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

