"எம்ஜிஆர் என் பெரியப்பா என்று சொன்னதெல்லாம் பொய்யா?" -முதல்வரை சாடிய உதயகுமார்

"எம்ஜிஆர் என் பெரியப்பா என்று சொன்னதெல்லாம் பொய்யா?" -முதல்வரை சாடிய உதயகுமார்
"எம்ஜிஆர் என் பெரியப்பா என்று சொன்னதெல்லாம் பொய்யா?" -முதல்வரை சாடிய உதயகுமார்

மதுரை உலகத்தமிழ்ச் சங்க நுழைவு வாயிலில் எம்ஜிஆர் படத்தை அகற்றியதன் மூலம் எம்ஜிஆரை முதல்வர் ஸ்டாலின் பெரியப்பா என்று பொய்யுரை பேசியது நிரூபணம் ஆகி உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “இலக்கியத் திருவிழாவில் திமுகவின் ஆட்சிக்காலம், தமிழ் மொழியின் ஆட்சி காலம் என்று முதலமைச்சர் பேசியிருக்கிறார். ஆனால் மீனாட்சி சொக்கநாதர் உள்ள மதுரையிலே ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை 1986 ஆம் ஆண்டு எம்ஜிஆர்தான் நடத்திக் காட்டினார். தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றை பறைசாற்றும் வகையிலே எம்ஜிஆர் நடத்திய மாநாடு அமைந்தது என்று உலக தமிழர்களால் பாராட்டப்பட்டது.

மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் 1986ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் அடிக்கல் நாட்டிய கல்வெட்டு மற்றும் எம்ஜிஆர் புகைப்படம், அடிக்கல் நாட்டிய தொடக்க விழா காட்சிகள் யாவும், முகப்பு வாயிலிலே வைக்கப்பட்டுள்ளது. அதற்கு மரியாதை செய்வதென்பது ஒரு மரபாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைக்கு அது அகற்றப்பட்டுள்ளது.

எம்ஜிஆரை, வாக்குக்காக என் பெரியப்பா என்று அழைத்த முதலமைச்சர்,  இன்றைக்கு இதை அறிவாரா என்பதை மக்கள் கேள்வியாக எழுப்பி வைத்து இருக்கிறார்கள். வாய்க்கு வாய் `நான் அவரோடு பழகியவன், வளர்ந்தவன், என்னை ஆளாக்கியவர்’ என்றெல்லாம் ஸ்டாலின் சொன்னது, பொய்யுரையென வெளிச்சத்துக்கு வந்துள்ளது. படத்தை நீங்கள் அங்கு இருந்து அகற்றிவிட்டு ,உலக தமிழ் சங்கம் என்று நீங்கள் வைத்து இருக்கிற அந்த படம் என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியை அப்பட்டமாக காட்டுகிறது.

தமிழ் மொழியை பறைசாற்ற வேண்டும் என்பதற்காக பேரறிஞர் அண்ணா இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். புரட்சித்தலைவர் 5வது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையிலே நடத்தி தமிழன்னை சிலை திறந்து வைத்து வரலாற்று சிறப்பை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா 8வது உலகத் தமிழ் மாநாட்டை தஞ்சை தரணியில் நடத்திக் காட்டினார்கள்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 50 லட்சம் நிதி கேட்டபோது, அப்போது கருணாநிதி 10 லட்சம் ரூபாயாக தவணை முறையில் தருவேன் என்று கூறினார். ஆனால் ஜெயலலிதா ஒரே தவணையில் அந்த நிதியை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க எடப்பாடி பழனிச்சாமி நிதியை அள்ளிக் கொடுத்தார். இப்படி அதிமுக தமிழை வளர்க்க பல விஷயங்களை செய்துள்ளது.

எம்ஜிஆர் படத்தை நீங்கள் அகற்றலாம். ஆனால் மக்கள் மனதில் இருந்து நீங்கள் புரட்சி தலைவரை அகற்றிவிட முடியாது. உங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது எல்லை தாண்டிய நிலையிலேயே இருப்பதை ஒவ்வொரு வாக்காளர்களும் இன்றைக்கு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எம்ஜிஆரின் அந்த கல்வெட்டு, திருவருவப்படம் உடனடியாக வைக்கப்பட வேண்டும். இல்லை என்றால் முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணையைப் பெற்று மதுரை மாவட்டம் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டக் களத்திலே மதுரை மக்களோடு சேர்ந்து இந்த அநீதியை கண்டித்து போராடுவோம் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்” என பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் உதயகுமார்.

ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com