தமிழ்நாடு
சசிகலா விவகாரம் - ஓ.பி.எஸ்., & இ.பி.எஸ் இடையே முரண்பாடு ஏன்? : செல்லூர் ராஜூ விளக்கம்
சசிகலா விவகாரம் - ஓ.பி.எஸ்., & இ.பி.எஸ் இடையே முரண்பாடு ஏன்? : செல்லூர் ராஜூ விளக்கம்
சசிகலா விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது தொடர்பாக கழகத்தின் தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்திருந்தார். சசிகலா விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மாறுபட்ட கருத்தால் கட்சியில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இக்கருத்து முரண்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், ''சசிகலா விவகாரத்தில் அதிமுக கட்சிக்குள் சர்ச்சையே கிடையாது. பழுத்த மரத்தில் தான் கல்லடி படும். சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கருத்து சொன்ன பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் கருத்து சொல்லவில்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தை தான் ஒருங்கிணைப்பாளர் சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறது? ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் சொன்னதில் தவறு எதுவும் இல்லை. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்று தான் ஓ.பி.எஸ். சொன்னார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட காரணத்தால், பிற நிர்வாகிகளும் அதற்கு எதிர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களை இப்போது சர்ச்சையாக மாற்ற விரும்பவில்லை'' என்றார்.