முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்
அமமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் திமுகவில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த பழனியப்பன், அவரது முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவாகவும், ஜெயலலிதா ஆட்சியின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பழனியப்பன், கடந்த முறை எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.
அதன்பிறகு, அமமுகவில் இணைந்து துணை பொதுச் செயலாளர் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், பழனியப்பன் திமுகவில் இணைந்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பழனியப்பன், முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களால் கவரப்பட்டு கட்சியின் தன்னை இணைத்துக் கொண்டதாக தெரிவித்தார். முன்னதாக, அமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச் செல்வன், செந்தில்பாலாஜி ஆகியோர் திமுகவில் இணைந்த நிலையில், பழனியப்பன் தற்போது சேர்ந்துள்ளார்.