'இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

“கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள் வழங்க வேண்டும்? எந்த இடத்தை வழங்க வேண்டும் என முடிவு செய்யும் அதிகாரம் அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
ஜெயக்குமார்
ஜெயக்குமார்கோப்பு படம்

ம.பொ. சிவஞானத்தின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சாமிநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அதேபோல தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், த.மா.க கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், பாஜக சார்பில் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு:-

அமைச்சர் சாமிநாதன்
அமைச்சர் சாமிநாதன்

அமைச்சர் சாமிநாதன் பேட்டி:

''மா.பொ.சி சுதந்திர போராட்ட வீரர் என்பதை கடந்து தமிழக மக்களுக்காக குரல் கொடுத்தவர். தமிழகத்தின் உரிமைக்காக போராடியவர். தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர். அவரது பாதையில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். கலைஞர் நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் துவங்கும்''

தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி:

“புதிய மின்சார கொள்கை மக்களுக்கு நலன் தருவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம். முதலில் தொழிற்சாலைகளில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. மின்சார கட்டணம் இதன் மூலம் குறையும். வரும் காலங்களில் மின்சார தேவை அதிகரிக்கும். எனவே மாற்று மின்சார உற்பத்தி முறைகளை ஊக்கப்படுத்தும் விதமாகவே இந்த புதிய கொள்கை அமைந்துள்ளது. இந்த திட்டம் குறித்து மக்கள் மத்தியில் தொடக்கத்தில் இருந்தே வேறு விதமான தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. புதிய மின்சார கொள்கை மூலம் மக்களுக்கு நலன் மட்டுமே உள்ளது”

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன் பேட்டி

''சுதந்திர போராட்ட வீரர், தமிழுக்கு பாடுபட்ட மா.பொ.சி.,க்கு மரியாதை செலுத்துவதை தமகா பெருமையான கருதுகிறது. இன்னும் தமிழகத்தில் கள்ளச்சாரயம் தொழிற்சலை நடந்துகொண்டு இருக்கிறது. இதுபோன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவோரை தமிழக அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்''

கரு.நாகராஜன் பேட்டி

''தமிழக மக்களுக்காக தொடர்ந்து செயலாற்றிய மா.பொ.சி.க்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். பழனி கோவிலில் வேறு மதத்தை சார்ந்தவர்கள் செல்லக்கூடாது என பல ஆண்டுகளுக்கு முன்பே பலகைகளை வைத்துள்ளனர். அதனை இப்போது பெரிதாக்கி உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையே இந்த விதிமுறையை வைத்துள்ளது''

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

''அம்மா உணவகம் இன்று பாழடைந்து உள்ளது. அம்மா மினி கிளினிக்கின் திட்டத்தை நீக்கிவிட்டு இன்று நகர்புற நல்வாழ்வு மையம் என துவங்கி உள்ளனர். சொந்தமாக எந்த ஒரு சிந்தனையும் இல்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் மூட வேண்டும் என்ற வக்கிரபுத்தியுடன் திமுக செயல்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் பதில் அளிப்பார்கள். சிலை வைக்க ஒரு தகுதி வேண்டும் அந்த தகுதி முதல்வருக்கு இல்லை.

வேங்கை வயல் சம்பவம் நடைபெற்று இவ்வளவு காலம் ஆகியும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. யார் குற்றவாளி என இதுவரை கண்டுபிடிக்கவில்லை. சமூகநீதி குறித்து பேச இவர்களுக்கு தகுதி இல்லை.

சமூகநீதிக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உச்சநீதிமன்றம் 50% இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என தீர்ப்பளித்தது. அந்த நேரத்தில் கருணாநிதி ஆட்சியில் இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு இருப்பார். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் சட்ட பூர்வமாக போராடி வெற்றி பெற்றார். மண்டல கமிஷன் தமிழகத்திற்கு செல்லாது என போராட்டம் பெற்று விதி விளக்கு பெற்றவர் ஜெயலலிதா. அவர் இல்லை என்றால் இன்று 69% இட ஒதுக்கீடு இருக்காது.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

யார் (விஜய்) வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். வரலாம். அரசியலுக்கு வந்தால் பொறுமை, சகிப்புத்தன்மை வேண்டும். இது பெரிய சமுத்திரம். அதில் நீந்தி வர வேண்டும்.

அதேபோல தமிழகத்தில் கூட்டணி என்றால் அதிமுக தலைமையில் மட்டும் தான். யாருக்கு எத்தனை இடங்கள் வழங்க வேண்டும், எந்த இடத்தை வழங்க வேண்டும் என இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் அதிமுக மட்டுமே உள்ளது.

யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பை திண்றவன் தண்ணி குடிக்க வேண்டும் என்பது போல மக்கள் பணத்தை திருடினால் தண்டனை பெற வேண்டும். அதிமுக மீது குறி வைத்து நடவடிக்கை எடுத்தால் அதனை ஏற்றுகொள்ள முடியாது''.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com