“இப்போதாவது மத்திய அரசுக்கு புத்தி வந்தது” - ரூ.2,000 நோட்டு விவகாரத்தில் ப.சிதம்பரம் சாடல்

“500 ரூபாய், ஆயிரம் ரூபாய் தாளில் கருப்பு பணத்தை பதுக்க முடியும் என்றால், 2000 ரூபாய் தாளில் கருப்பு பணத்தை மிகவும் எளிதாக பதுக்க முடியும் என மத்திய அரசுக்கு தெரியாதா?”- ப.சிதம்பரம் சாடல்
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்கோப்புப் படம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராஜீவ் காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்கோப்புப் படம்

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “500 ரூபாய், ஆயிரம் ரூபாய் தாளில் கருப்பு பணத்தை பதுக்க முடியும் என்றால், 2,000 ரூபாய் தாளில் அதை மிகவும் எளிதாக பதுக்க முடியும் என மத்திய அரசுக்கு தெரியாதா? ஆனாலும் அதை கொண்டுவந்தார்கள். இப்போது ரூ. 2,000 தாளை திரும்பப்பெற்றது துக்ளக் தர்பார் ஆட்சியை காண்பிக்கிறது. இதில் மீண்டும் ஆயிரம் ரூபாய் தாளை மத்திய அரசு கொண்டு வந்தால் நான் வியப்படைய மாட்டேன்.

தான் செய்த தவறை மறைப்பதற்காகத்தான் 2,000 ருபாய் தாளை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. மக்கள் ஏற்றுக் கொள்ளாத ரூபாய் தாளை மத்திய அரசு வெளியிடுவது மிகவும் தவறான செயல். செய்த தவறை ஒத்துக் கொள்ளாமல் 2,000 ரூபாயை திரும்ப பெற்றுள்ளது. 2,000 ரூபாய் தாளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நாங்கள் சுட்டிக் காட்டியும், மத்திய அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதாவது மத்திய அரசுக்கு புத்தி வந்தது. 2,000 ரூபாய் தாளை திரும்ப பெற்றதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

முழுக்க முழுக்க சிந்திக்காமலும், யோசிக்காமலும் எடுத்த முடிவை நியாயப்படுத்தும் முயற்சி தான் 2000 ரூபாய் தாளை விலக்கிக் கொண்டது.

செய்த தவறை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இருப்பினும் 7 ஆண்டுக்கு பிறகு அதனை திருத்திக் கொண்டது மகிழ்ச்சியே” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com