“ரஜினி மக்கள் செல்வாக்கு கொண்ட அரசியல் தலைவர்” - திருநாவுக்கரசர் பேட்டி

“ரஜினி மக்கள் செல்வாக்கு கொண்ட அரசியல் தலைவர்” - திருநாவுக்கரசர் பேட்டி

“ரஜினி மக்கள் செல்வாக்கு கொண்ட அரசியல் தலைவர்” - திருநாவுக்கரசர் பேட்டி
Published on

கட்சி தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும் ரஜினிகாந்த் மக்களால் மதிக்கப்படும் ஒரு அரசியல் தலைவர் தான் என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள திருநாவுக்கரசரின் வீட்டிற்கு தனது மகளின் திருமண அழைப்பிதழ் வழங்க ரஜினிகாந்த் வருகை தந்திருந்தார். அந்த சமயம் திருமாவளவனும் வந்ததால் மூன்று பேரும் சந்தித்துக்கொண்டனர். சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “நண்பர் ரஜினிகாந்துக்கும் எனக்கும் 40 ஆண்டுகள் பழக்கம். நெருங்கிய நண்பர். ரஜினிகாந்தின் மகளின் திருமணம் நடைபெறவுள்ளது. எனவே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அவர் அழைப்பிதழ் தந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதால், அரசியல் சூழல்கள், நாட்டின் நிலவரம் போன்ற பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் அமெரிக்கா சென்றபோது, அங்கு ரஜினிகாந்த் சென்றிருந்தார். 

அவர் ஒரு மாநிலத்தில் இருந்திருப்பார், நான் ஒரு மாநிலத்தில் இருந்திருப்பேன். நாங்கள் அங்கு சந்தித்துக்கொள்ளவில்லை. சந்தித்தால், சந்தித்தேன் எனக்கூறப்போகிறேன். நாங்கள் 40 வருட நண்பர்கள் என்பதால், அடிக்கடி சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறோம். அவரை அமெரிக்காவில் சென்றுதான் சந்திக்க வேண்டுமென்பதில்லை. ரஜினிகாந்த் அரசியல் கட்சித் தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும் அவர் மக்களால் மதிக்கப்படும் ஒரு தலைவர் தான். ஜெயலலிதா காலத்தில் இருந்தே ரஜினிகாந்த் அரசியல் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். 

சினிமாவிலும் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார். எனவே அவர் கட்சி தொடங்காமல் இருந்தாலும், அவரும் ஒரு அரசியல் தலைவர் தான். இரண்டு அரசியல் தலைவர்களும் சந்தித்தால் அரசியல் பேசாமலா இருப்போம். பேசத்தான் செய்தோம். மற்றபடி, அவர் கட்சி ஆரம்பிப்பாரா? எப்போது ஆரம்பிப்பார் ? என்பதெல்லாம் அவர் தான் முடிவு செய்வார். ஆனால், என்னை எல்லாம் ரஜினி அழைக்கமாட்டார். ஏனென்றால் நான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் விசுவாசி. அவர் பிரதமர் ஆக வேண்டும் எனப் பாடுபடுவேன். எனவே காங்கிரஸில் தான் இருப்பேன்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com