"ஓபிஎஸ்ஸை நம்பி அவர் கைப்பிடித்து இருட்டில்கூட செல்ல முடியும்"- சந்திப்புக்கு பின் தினகரன் பேட்டி!

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
ops, ttv dhinakaran
ops, ttv dhinakarantwitter page

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக இயங்கிவந்தனர். இருதரப்பும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை சென்று போராடியது. இறுதியில், கட்சியின் கட்டுப்பாடு அனைத்தும் எடப்பாடி வசம் சென்றது. சட்டப்போராட்டத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்ததால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்திவந்தார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்புதிய தலைமுறை

இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களைத் திரட்டி, திருச்சியில் மாநாடு ஒன்றையும் நடத்தினார். தொடர்ந்து, டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா உடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும், அவர்களை விரைவில் சந்திப்பேன் எனவும் ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது அடுத்தகட்ட அரசியல் நகர்வு மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக கூறினர். அப்போது பேசிய டி.டி.வி.தினகரன், “அ.தி.மு.க மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளில் நானும், சகோதாரர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்படவுள்ளோம். ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமும். நானும் ஓபிஎஸ்ஸும் சி.பி.ஐ, சி.பி.எம் போல இணைந்து செயல்படுவோம்.

ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், பண்ருட்டி ராமச்சந்திரன்
ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், பண்ருட்டி ராமச்சந்திரன்twitter page

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்கறிந்தவர்கள். ஓ.பன்னீர்செல்வத்துடன் எந்த மனக்கசப்பும் இல்லை. மனதளவில் எந்த பகையுணர்வும் இல்லை. எந்த சுயநலமும் இல்லை. நேரில் சந்திக்கவில்லையே தவிர, அடிக்கடி தொலைபேசியில் ஓபிஎஸ் உடன் பேசிக்கொண்டுதான் இருந்தேன். ஓபிஎஸ்ஸை நம்பி அவர் கைப்பிடித்து இருட்டில்கூட செல்ல முடியும். இபிஎஸ்ஸை நம்பி செல்ல முடியுமா? ஆணவத்துடன், அரக்கர்கள் போல செயல்படும் நபர்களிடம் இருந்து அதிமுகவை மீட்கவுள்ளோம். உண்மையான தொண்டர்கள் கையில் அதிமுகவை ஒப்படைப்போம்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”கடந்த காலங்களை மறந்துவிட்டு இருவரும் ஒன்றிணைந்துள்ளோம். சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தேன். அவர் தற்போது வெளியூரில் இருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் சசிகலாவைச் சந்திப்பேன். அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும். கிரிக்கெட் போட்டி பார்க்கச் சென்றபோது மரியாதை நிமித்தமாக சபரீசனை சந்தித்தேன். அது தற்செயலானது, மரியாதை நிமித்தமானது. மனிதருக்கு மனிதர் மரியாதை கொடுக்கும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், பண்ருட்டி ராமச்சந்திரன்
ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், பண்ருட்டி ராமச்சந்திரன்twitter page

பண்ருட்டி ராமச்சந்திரன், “ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். கடந்தகாலத்தை பற்றி எதையும் பேச விரும்பவில்லை. அதிமுகவின் எதிர்காலம் கருதி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்காலத்தை பற்றியே திட்டமிடுகிறோம். சமூக விரோத கும்பலிடமிருந்து அதிமுகவை மீட்பதே இரு கட்சிகளின் நோக்கம்” என்றார்.

இவர்கள் இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com