ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்திருக்க வேண்டுமா ? மருத்துவர்கள் சொல்வது என்ன ?

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்திருக்க வேண்டுமா ? மருத்துவர்கள் சொல்வது என்ன ?
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்திருக்க வேண்டுமா ? மருத்துவர்கள் சொல்வது என்ன ?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏன் ஆஞ்சியோகிராம் செய்யப்படவில்லை என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதய நோய் மாரடைப்பு இருக்கிறதா என கண்டறியவதற்கு மருத்துவத் துறையில் ஆஞ்சியோகிராம் செய்வது மிகவும் சாதாரணமானதாக மாறிவிட்டது. ஆனால் ஒரு அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தபோது, பரவலாக ஆஞ்சியோகிராம் இப்போது பேசு பொருளாக மாறிவிட்டது.

இது குறித்து மேலும் கூறிய சி.வி.சண்முகம் "நெஞ்சு வலி என்று மருத்துவமனை சென்றாலே ஆஞ்சியோகிராம் செய்வார்கள். அந்த அளவிற்கு அது சாதாரணமாகிவிட்டது. நானே இரண்டு முறை ஆஞ்சியோகிராம் செய்திருக்கிறேன். செய்துவிட்டு 15 நிமிடங்களில் வீடு திரும்பினேன்" என்றார். ஆனால் அப்போலோ மருத்துவமனை தரப்போ "ஜெயலலிதாவுக்கு இதய நோய் இல்லை அதனால் ஆஞ்சியோ தேவைப்படவில்லை" என விளக்கமளித்தது.முதலில் ஆஞ்சியோ என்றால் என்ன என்பதை பார்க்கலாம். அதர்கு முன்பு மாரடைப்பு குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். 

மாரடைப்பு 

ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது. இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடைக்கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.

மாரடைப்புக்கான அறிகுறி

மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம். சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு "அமைதியான மாரடைப்பு" என்று பெயர். மாரடைப்பை உறுதி செய்வதற்கான ஒருவித சிகிச்சை முறையே ஆஞ்சியோகிராம்.

ஆஞ்ஜியோகிராம் நடைமுறை என்ன ? 

இது குறித்து கூறிய இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சீனிவாசன் கூறியது "மாரடைப்பை கண்டறியவதற்கு எந்தச் சிக்கலோ, பக்கவிளைவோ இன்றி எளிதாக செய்யப்படும் பரிசோதனைதான் ஆஞ்சியோகிராம். மெல்லிய, வளையும் தன்மை கொண்ட, நீளமான பிளாஸ்டிக் டியூப்கள் வலது கையின் மணிக்கட்டில் உள்ள ரத்தக்குழாய் மூலமாகவோ, வலது அல்லது இடது பக்கத் தொடைகளின் மேல்பகுதி இடுப்பில் உள்ள ரத்தக்குழாயின் வழியாகவோ செலுத்தப்பட்டு, பிளாஸ்டிக் குழாயின் நுனிப்பகுதி இதயத்தின் ரத்தக்குழாய்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.இந்த பிளாஸ்டிக் குழாய்கள் வழியாக எக்ஸ்ரே மூலம் எளிதில் பார்க்கக் கூடிய ஒருவித சிறப்பு வேதியியல் பொருள் இருதயத்தின் ரத்தக்குழாய்க்குள் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் இருதய ரத்தக் குழாயின் தன்மைகளை முழுமையாக பரிசோதிக்கலாம். இந்தப் பரிசோதனையை எந்த வலியில்லாமலும், மயக்க மருந்து கொடுக்காமலும் எளிதாக செய்யலாம். மருத்துவமனையில் ஓரிரு நாட்கள் தங்கினால் போதும். இப்போது இது மேலும் நவீனப்படுத்தப்பட்டுள்ளதாக" தெரிவிக்கிறார் அவர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com