மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
சென்னையை அடுத்த ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருவேற்காடு உட்பட 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் காவல்துறையினரைக் கௌரவிக்கும் வகையில் நேரில் சென்று தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டிய ராஜன் பாராட்டினார். அத்துடன் கபசுர குடிநீர் பொடி, சோப்பு, சானிடைசர், நினைவுப் பரிசு, பொன்னாடை கொண்ட பொருட்களின் தொகுப்பைத் தாம்பூலத் தட்டில் வைத்து காவல்துறையினருக்கு வழங்கினார்.
இதற்கிடையே அம்பத்தூர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் துவங்கிய நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட இணை ஆணையர் விஜயகுமாரி மற்றும் அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த பாண்டிய ராஜன், வேதா இல்லம் நினைவிடமாக மாற்றுவது குறித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி என்றார்.
சென்னையில் காந்தி மண்டபம் இருப்பது போல ஜெயலலிதாவின் நினைவிடம் அவரின் புகழினை போற்றும் வகையில் அமையும் என்றார். அத்துடன் சென்னையின் மிக முக்கிய இடங்களில் ஒன்றாக போயஸ் கார்டன் மாறும் எனவும், ஜெயலலிதா நினைவிடம் வரலாற்றில் இடம்பிடிக்கும் எனவும் தெரிவித்தார்.