
மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
"மரக்காணம் எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலருக்கு கண் பார்வை, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சித்தாமூரில் போலி மதுபானம் அருந்தி 5 பேர் இறந்துள்ளனர். இது துயரமான சம்பவம்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இரண்டு ஆண்டுகளாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. கள்ளச்சாராய விற்பனையில் திமுகவினரே ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 13 பேர் தங்களது விலைமதிக்க முடியாத உயிரை இழந்துள்ளனர். போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி விற்பனை செய்கின்றனர். அதிமுக ஆட்சியில் போலி மது விற்பனையை தடுக்க குழு அமைக்கபட்டது. ஆனால், திமுக ஆட்சியில் அதுபோன்ற குழு இல்லை.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டே நாளில் 1600 பேர் கைது செய்யப்படுகிறார்கள். மது விற்பனை அரசுக்கு தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. உயிரிழப்பிற்கு முழு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தடையில்லா கள்ளச்சாராயம் விற்பனை செய்யபடுவதற்கு ஆளும் கட்சி துணை போகிறது. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க கூறியிருந்தோம் அதனை திமுக அரசு செய்யவில்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக கூறினார்கள். ஆனால் கள்ளச்சாராயம் தான் ஆறாக ஓடுகிறது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். இந்த துறை அமைச்சரை நீக்க வேண்டும். அரசாங்கமே மதுபானம் அருந்த ஆதரவு கொடுக்கிறது. திருமணம், விளையாட்டு மைதானத்தில் மதுபானம் குடிக்கலாம் என அரசாங்கம் கூறுகிறது. தமிழக மது விற்பனையில் செந்தில் பாலாஜி பத்து சதவீதம் லஞ்சம் பெறுகிறார். சாராய உயிரிழப்பு குறித்து பேசாமல் சமூக போராளிகள் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. அரசின் கைகூலியாக அவர்கள் செயல்படுகிறார்கள்.
சமூக போராளிகள் நடிகர்கள் மற்றும் திமுகவின் கூட்டனியில் உள்ளவர்கள் இச்சம்பவம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் எங்களை ராஜினாமா செய்ய சொன்னவர்கள் தற்போது ஏன் ராஜினாமா செய்யவில்லை. ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு பேசுபவர்களா நீங்கள்" என்று தெரிவித்தார்.