அரசியல் ராஜதந்திரி, அடுக்கு மொழி வித்தகர், சிந்தனையைத் தூண்டும் பேச்சாளர், எழுச்சிமிகு எழுத்தாளர் போன்ற அடையாளங்களுக்குள் மட்டுமே அண்ணாவை அடைத்துவிட முடியாது. சரியாக வாராத தலை, அரைகுறை தாடி வளர்ந்த முகம், வெற்றிலைக் கறைபடிந்த பற்கள், அழுக்கு படிந்த வேட்டி என்ற தோற்றத்துடன் வலம்வந்த இவர்தான், இன்றும் தொடரும் திராவிட ஆட்சிக்கு விதை விதைத்தவர்.
1909இல் காஞ்சியில் பிறந்து, சென்னையில் பட்டம் பயின்றவர். திருப்பூரில் தந்தை பெரியாரைச் சந்தித்து பின்னர் கருத்து வேறுபாடால் வடசென்னையில் திராவிடர் முன்னேற்றக் கழகம் கண்டவர். திருச்சியில் சிறைப்பட்டு பட்டித் தொட்டி எங்கும் இந்தித்திணிப்பை எதிர்த்து 1967இல் முதல்வரானவர். ஏட்டில் இருந்த பெரியார் கொள்கைகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியவர்.
இருமொழிக்கொள்கையை சட்டமாக்கி இந்தி பேசாத மாநிலங்களுக்கு தமிழகத்தை முன்னுதாரணமாக்கியவர் அண்ணா. மாநில உரிமைகளை உரத்து பேசியவர், அரசாங்கத்தின் குறிப்பிட்ட செயல்களுக்கு பொதுமக்களின் ஆதரவு உண்டா; இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளும் வாக்களிப்பு முறை அமலாக்கப்படாத வரை, ஜனநாயகத்துக்கான எந்தப் பலனையும் மக்கள் எதிர்பார்க்க முடியாது என்று 1962 லேயே நாடாளுமுன்றத்தில் பேசியவர் அண்ணா.
ஆட்சி புரிந்தது இரண்டே ஆண்டுகள் என்றாலும், பெரியாரின் கொள்கைகளான சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கியது, மதராஸ் எனும் மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியது, நில உச்சவரம்பு சட்டத்தை நிறைவேற்றியது, கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியது உள்ளிட்ட திட்டங்கள் மாற்றத்திற்கு வித்திட்டன.