மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நாடார் மஹாஜன சங்க 72 ஆவது மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாளான நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அங்கு பேசிய அவர்..
”தொடர்ந்து 113 ஆண்டுகளாக நாடார் சமுதாயத்திற்காக சிறப்பான பணியை இந்த சங்கம் செய்து வருகிறது. நாடார் சமுதாயத்தினர் உழைப்புக்கு பேர் போனவர்கள். சிப்கட், தொழில் பேட்டை போன்றவற்றுக்கு அடித்தளம் உருவாக்கியது நாடார் சமுதாயம். தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக கல்வி நிறுவனங்களை உருவாக்கியது. நாடார் சமூகம் என்று சென்னாலே பெருந்தலைவர் காமராஜர் தான் நினைவுக்கு வருவார்.
காமராஜரை பற்றி பேசுவதற்கு அதிமுகவுக்கு உரிமை உள்ளது. பெருந்தலைவர் என்று சொன்னால் காமராஜருக்கு மட்டும்தான் பொருந்தும். அதனால்தான் ஊராட்சி பெருந்தலைவர் என்பதை ஊராட்சிக் குழுத் தலைவர் என மாற்றி அமைத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
விருதுநகரில் காமராஜர் பிறந்த நாளை திருவிழாவாக கொண்டாடியதில் நான் கலந்து கொண்டதில் பெருமையாக கொள்கிறேன். கிராமப் புறங்களில் பள்ளிகளைத் தொடங்கி ஏழை மக்களுக்கு கல்வி வழங்கியது இந்த சமுதாயம்.
உங்களுக்கான உரிய மரியாதையை அதிமுக கொடுத்து வருகிறது. நாடார் சமுதாயத்துடன் நல்ல இணக்கமாக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக. இவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்தது அதிமுக. அச்சமில்லாமல் வியாபாரம் செய்தனர். அனைத்து சமுதாய மக்களும் வியாபாரம் செய்வதற்கு பாதுகாப்பாக இருந்தது அதிமுக. ஆனால், இப்போது வியாபாரம் செய்பவர்கள் அச்சப்படுகிறார்கள். தற்போது அந்த அளவுக்கு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
காமராஜர் வழியை பின்பற்றி பள்ளி மாணவர்களுக்கு பணியாற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து அதிமுக அரசு செய்யும். காமராஜரை தொடர்ந்து அதிமுக அரசு இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பில் முதல் மாநிலமாக மாற்றியது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுடைய சமுதாயத்திற்கும் இடம் உண்டு. நாங்கள் வேட்பாளரை நிறுத்துகிறோம் வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை” என தெரிவித்தார்.