``சொத்துக்கள் முடங்கியதால் எம்எல்ஏ-வாக தொகுதிக்கு செலவு செய்ய முடியவில்லை”- சி.விஜயபாஸ்கர்

``சொத்துக்கள் முடங்கியதால் எம்எல்ஏ-வாக தொகுதிக்கு செலவு செய்ய முடியவில்லை”- சி.விஜயபாஸ்கர்
``சொத்துக்கள் முடங்கியதால் எம்எல்ஏ-வாக தொகுதிக்கு செலவு செய்ய முடியவில்லை”- சி.விஜயபாஸ்கர்

206 கோடியே 42 லட்சம் ரூபாய் வரி பாக்கி வசூலிப்பதற்காக தனக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தை முடக்கியும், வங்கிக் கணக்கில் முடக்கியும் வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது,  வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரிப் பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.

இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், “2011-12ஆம் ஆண்டு முதல் 2018-19ஆம் ஆண்டு வரையிலான கணக்கீட்டு பணிகள் நடந்துகொண்டிருந்தபோது, அவசர கதியில் வரி மதிப்பீடு செய்வதாக வருமான வரி செட்டில்மெண்ட் ஆணையத்தை 2019 டிசம்பர் 28ல் அணுகினோம். எனது கோரிக்கையை 2020 ஜனவரி 9ல் நிராகரித்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.

“இதையடுத்து கடந்த அக்டோபர் 20ஆம் தேதி எனக்கு சொந்தமான 48 சர்வே எண்களில் உள்ள 117.46 ஏக்கர் நிலம் மற்றும் எம்.எல்.ஏ. சம்பளம் பெறும் வங்கி கணக்கு உள்ளிட்ட 4 நான்கு வங்கி கணக்குகளை முடக்கி வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

எம்.எல்.ஏ. ஊதியம் மட்டுமல்லாமல், விவசாயம், கல் உடைக்கும் ராசி புளூ மெட்டல் நிறுவனம், நிலங்களில் குவாரி குத்தகை ஆகியவற்றின் மூலம் எனக்கு வருமானம் வரும். ஆனால் சொத்துக்கள் முடக்கத்தால் உரிமங்களை புதுப்பிக்க முடியவில்லை” என கூறியுள்ளார். மேலும் வங்கிக் கணக்குகளில் எம்.எல்.ஏ.வுக்கான சம்பளத்தையும், அரசு நிதிகளையும் பெறுவதாகவும், அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு நாளை மறுநாள் (டிசம்பர் 1) பதில் அளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com