"சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்காதது நடிகர் விஜய் மீதுள்ள பயம் தான்.." - கடம்பூர் ராஜு பேட்டி

”சிறப்பு காட்சி வழங்கிய பின்னர் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது முறை கிடையாது. தற்போது திரைத்துறை முடங்கி உள்ளதாக அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்” என்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, “நடிகர் விஜய்யை கண்டு திமுக பயப்படுகிறது. அரசு நடிகர்களிடையே பாரபட்சம் பார்க்கக் கூடாது. அதிமுக ஆட்சி காலத்தில் பாரபட்சம் இல்லை. 2006 முதல் 2011வரை ஒரு குடும்ப கட்டுப்பாட்டில் இருந்தது. திமுக ஆட்சி காலத்தில் திரைத்துறை முடங்கி போய் இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் வெளிப்படையான நிர்வாகத்தினால் திரைத்துறை நல்ல முன்னேற்றத்தை பெற்றது.

சிறப்பு காட்சி வழங்கிய பின்னர் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது முறை கிடையாது. தற்போது திரைத்துறை முடங்கி உள்ளதாக அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர். தமிழ் சினிமாவில் 200 திரைப்படங்களை வெளியிட முடியாமல் முடங்கி உள்ளது. இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸின் ஆதிக்கம் தான். அதனுடைய உரிமையாளர் இன்று அமைச்சராக உள்ளார். நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின்‌ பாடல் வெளியீட்டு விழா நடத்த பல்வேறு காரணங்களை கூறி அனுமதி தரவில்லை. ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் படத்திற்கு அனுமதி கொடுத்தனர். பாரபட்சமாக பார்க்கப்படும் நிலை திரைத்துறைக்கு நல்லது கிடையாது‌. திரைத்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும்” என்றார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com