பதிவாளர் நியமனத்தில் முறைகேடு?: புதிய தலைமுறைக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்களும் புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது.
திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் 36 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கணினி அறிவியல் துறைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் சுமார் 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர் கோபிநாத். கடந்தாண்டு இவர், பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்டார். பதிவாளராக கோபிநாத் நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுவதுதான் தற்போதைய சர்ச்சை.
பல்கலைக்கழக பதிவாளர் நியமனத்திற்காக, கடந்தாண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலில் கோபிநாத் உட்பட12 பேர் பங்கேற்றனர். அதில் கோபிநாத் பதிவாளராகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் தேர்வு செய்யப்பட்ட முறையில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கிறது. நேர்காணலில் பங்கேற்ற 12 பேர்களில் ஒருவர்தான் சந்தேகத்தை எழுப்பியிருப்பவர். கோபிநாத் மீதான முறைகேடுப் புகாருக்கு வலுசேர்க்கும் விதமாக ஆர்டிஐ தகவல்கள் சிலவும் புதியதலைமுறைக்கு கிடைத்துள்ளன. அவையெல்லாம் அதிர்ச்சி ரகம்.
தற்போது பதிவாளராக இருக்கும் கோபிநாத், நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என அவரே கையெழுத்திட்ட படிவம் நமக்கு கிடைத்திருக்கின்றன. அதேபோல், ஆய்விதழ்கள் மற்றும் புத்தகத்தை நேர்காணலின் போது கோபிநாத் சமர்ப்பிக்காத நிலையில், அவற்றிற்கு முழு மதிப்பெண்களும் வழங்கப்பட்டிருப்பதை ஆர்டிஐ ஆவணங்கள் உறுதி செய்கின்றன.
பதிவாளர் தேர்வுக்கான 100 மதிப்பெண்களில் கல்விச்சான்றுக்காக 75 மதிப்பெண்களும், நேர்காணலுக்கு 25 மதிப்பெண்களும் ஒதுக்கப்படும். அதில் கல்விச் சான்றுக்காக ஒதுக்கப்படும் 75 மதிப்பெண்களுக்கு 49 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் கோபிநாத். கல்விச்சான்றுக்கான மதிப்பெண்களில் இவரைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நேர்காணலில் குறைந்த மதிப்பெண்ணும், மொத்தம் 25 மதிப்பெண்களில் கோபிநாத்துக்கு 23 மதிப்பெண்களும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருந்ததால், கடந்த ஆண்டு பதிவாளர் நேர்காணலை நடத்தியது, தற்போது உயர்கல்வித்துறை செயலாளராக இருக்கும் சுனில் பாலிவால். இந்நிலையில் பணிநியமன சர்ச்சைக்கு அவரே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.