மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட டி23 புலியின் உடல் சீராக உள்ளது : வனத்துறை அமைச்சர்

மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட டி23 புலியின் உடல் சீராக உள்ளது : வனத்துறை அமைச்சர்
மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட டி23 புலியின் உடல் சீராக உள்ளது : வனத்துறை அமைச்சர்

டி23 புலி இன்று உயிருடன் பிடிப்பட்டதை தொடர்ந்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் வந்து தற்போது பேசியுள்ளார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், “நீலகிரி மாவட்ட வனத்துறை வரலாற்றில் இதற்கு முன்பு பிடிக்கப்பட்ட 3 புலிகளும் சுட்டுக்கொல்லப்பட்டே பிடிக்கப்பட்டிருந்தது. தற்போது பிடிக்கப்பட்டிருப்பதோ, முதன்முறையாக உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வனத்துறையினரின் உயர் அதிகாரிகளால் ஆலோசிக்கப்பட்டு, மைசூர் உயிரின பூங்காவிலுள்ள மீட்பு மையத்தில் புலி அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு புலி முழுமையான குணமான பிறகு, அப்புலி வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுமா அல்லது மைசூர் உயிரின பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுமா என்பது முடிவுசெய்யப்படும். இவ்விவகாரத்தில் தமிழக அரசின் ஆலோசனையும் பெறப்பட்டே முடிவெடுக்கப்படும்.

இந்த டி 23 புலிக்கு 13 வயதாகியுள்ளது தெரியவந்துள்ளது. வயதான புலி என்பதால், அது தனக்கான ஆக்கிரமிப்பை நிலைநாட்டியுள்ளது. அந்த ஆக்கிரமப்பு பகுதிக்குள் சென்ற மனிதர்கள் அனைவரும் தாக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தப் புலியை பிடித்தபோதும், சிறு அளவிலான சில மோதல்கள் அதிகாரிகளுக்கும் புலிக்கும் நிகழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்துதான் புலி வனவிலங்கு பூங்காவின் மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு அதன் உடல்நிலை சீராக உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. 4 கால்நடை மருத்துவர்கள் புலியை கண்காணித்து வருகின்றனர்” என்றார்.

முன்னதாக இந்த டி 23 புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என மக்கள் போராடினர். இந்நிலையில், புலியை சுடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனால், புலியை உயிருடன் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் விளைவாக முதன்முறையாக ஒரு புலி உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. டி 23 புலி பிடிப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் என வன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com