கோவை காட்டு யானை சின்னத்தம்பி பிடிபட்டது !

கோவை காட்டு யானை சின்னத்தம்பி பிடிபட்டது !
கோவை காட்டு யானை சின்னத்தம்பி பிடிபட்டது !

இந்தியாவிலேயே யானை - மனிதன் மோதல் காரணமாக அதிகளவிலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மாவட்டம் கோவைதான். இப்போது ஓரளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டதால் பலி எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துக்கொண்டே வருகிறது. ஆனால், யானை ஊருக்குள் புகும் விவகாரம் மட்டும் தொடர் கதையாகி வருகிறது. யானை ஊருக்குள் வருவதும், வனத்துறையினரிடம் புகார் தெரிவிப்பதும், பின்பு மயக்க ஊசி செலுத்தப்பட்டு மீண்டும் அவற்றை காட்டுக்குள் விடுவதும் கடந்த சில ஆண்டுகள் அதிகரித்து வருகிறது

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடையில் கடந்த டிசம்பர் மாதம் ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. விநாயகன், சின்னதம்பி என்ற இரண்டு யானைகளும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து நாசம் செய்தன. பின்னர் அங்கிருந்த வாழை மற்றும் விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தின.

இதனையடுத்து 2 காட்டுயானைகளையும் பிடித்து அதனை இடமாற்றம் செய்ய 4 கும்கிகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் கும்கி யானைகளுக்கு காட்டு யானைகள் அடங்கவில்லை. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தி யானைகளை பிடிக்க வனத்துறை திட்டமிட்டது. அதன்படி விநாயகன் யானை பிடிபட்டது. ஆனால் சின்னதம்பி தப்பியது. சின்னத்தம்பியை உடனடியாக பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மீண்டும் கும்கி யானைகள் உதவியுடனும், மயக்க மருந்து செலுத்தி பிடிக்கும் திட்டத்துடனும் வனத்துறை களம் இறங்கினர். 

அதன்படி கும்கி யானைகள் உதவியுடன் சின்னத்தம்பி பிடிபட்டது. அதற்கு மயக்க மருந்து செலுத்திய வனத்துறையினர், அதன் கழுத்தில் காலர் ஐடி கட்டி வனத்துக்குள் விட முடிவு செய்துள்ளனர். தற்போது பிடிபட்டுள்ள சின்னதம்பியை மருத்துவர்கள் உடல்பரிசோதனை செய்துள்ளனர். அதன் உடல்நிலை சீராக இருந்தால் சின்னதம்பியை டால்சிலிப் வனத்துக்குள் கொண்டு விட வனத்துறை முடிவு செய்துள்ளது.

முன்னதாக வாழ்வாதாரத்தை நாசம் செய்யும் காட்டு யானைகளை உயிருடனோ அல்லது சுட்டோ பிடிக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால் யானைகளின் வலசை பகுதியை ஆக்கிரமித்த காரணத்தினாலே காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருவதாகவும் அதனால் யானைகளை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் யானைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்நிலையில் தான் கட்டுயானை சின்னதம்பி பிடிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பரில் பிடிபட்ட காட்டுயானை விநாயகன் முதுமலைக்காடுகளில் ஆரோக்யமாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com