போக்குகாட்டி வந்த அரிக்கொம்பன் பிடிபட்டது! எங்கு கொண்டு செல்லப்படுகிறது யானை? வெளியான தகவல்! #Video
தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் (எ) அரிசிக்கொம்பன் காட்டு யானை, அங்கிருந்து மேகமலைக்கு சென்றது. பின்னர் சின்ன ஓவலாபுரம் பகுதியை ஒட்டியுள்ள வனத்தில் அரிக்கொம்பன் யானை கடந்த ஏழு நாட்களாக இருந்தது.

சமதளத்திற்கு வந்த பிறகே யானையை பிடிக்க வேண்டும் என வனத்துறையினர் காத்திருந்தனர். இதற்காக வனத் துறையினர் 24 மணிநேரமும் அரிக்கொம்பனை கண்காணித்து வந்த நிலையில், (விவசாயிகள் அளித்த தகவலின் படி) இன்று காலை யானை சமதளத்திற்கு வந்ததை உறுதி செய்த வனத்துறையினர், கால்நடை மருத்துவக்குழுவின் ஆலோசனையின்படி யானைக்கு இரண்டு டோஸ் மயக்க ஊசி செலுத்தி அதை பிடித்துள்ளனர்.
மயக்க ஊசி செலுத்தப்பட்ட அரிக்கொம்பன் யானை தற்போது லாரியில் ஏற்றப்பட்டுள்ளது. முன்னதாக யானையை லாரியில் ஏற்றுவதற்காக, பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து சுயம்பு, அரிசி ராஜா, ஊட்டி முதுமலையில் இருந்து உதயன் ஆகிய கும்கிகள் வரழைக்கப்பட்டன.

அவற்றின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தப்பட்ட அரிசி கொம்பன் யானை, லாரியில் ஏற்றப்பட்டது. பிடிபட்ட அரிக்கொம்பன் யானை, முண்டன்துறை புலிகள் காப்பக பகுதியில் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. தற்போதுவரை இவ்விஷயத்தில் வனத்துறை ரகசியம் காத்துவருகிறது.
கொண்டு செல்லப்படும் வனத்தைச் சுற்றியுள்ள மக்கள், சில நேரங்களில் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதால் இந்த கடுமையான ரகசியம் காக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் பிடிக்கப்பட்ட யானை தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட வனப் பகுதிகளில் மீண்டும் விடப்படாது எனவும், அரிக்கொம்பனுக்காகவே வேறு அடர்ந்த வனப்பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அரிக்கொம்பன் யானை, லாரியில் ஏற்றி அழைத்துச்செல்லப்படும் காட்சியை, இங்கே காணலாம்...