சன்-கிளாஸூடன் விறகடுப்பில் பொங்கல் வைத்து குலவை ஒலி எழுப்பி Vibe செய்த வெளிநாட்டினர்!

சன்-கிளாஸூடன் விறகடுப்பில் பொங்கல் வைத்து குலவை ஒலி எழுப்பி Vibe செய்த வெளிநாட்டினர்!
சன்-கிளாஸூடன் விறகடுப்பில் பொங்கல் வைத்து குலவை ஒலி எழுப்பி Vibe செய்த வெளிநாட்டினர்!

தூத்துக்குடியில் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து வெளிநாட்டினர் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சென்னையில் உள்ள 'கிளாசிக் ரன்' என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் கடந்த 16 வருடங்களாக வெளிநாட்டினர் பங்குபெறும் 'ஆட்டோ சேலஞ்ச்' என்ற ஆட்டோ சுற்றுலா பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ சேலஞ்ச் சுற்றுலா பயணம் கடந்த 28 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.

இதில், அமெரிக்கா, நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, இஸ்தோனியா உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த 37 பேர் கலந்து கொண்டு ஆட்டோவில் 17 அணிகளாக பிரிந்து 17 ஆட்டோக்களில் சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை வழியாக இன்று தூத்துக்குடி வந்தனர். இதையடுத்து உப்பளங்கள், பிரசித்திபெற்ற பனிமய அன்னை ஆலயம், முத்துநகர் கடற்கரை ஆகியவற்றை பார்த்துவிட்டு தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் பொங்கல் கொண்டடுவதற்காக வந்தனர்.

இதற்காக தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள் குலை, வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஆட்டோக்களில் தோட்டத்துக்கு வந்த அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் தமிழர்களின் பாரம்பர்ய உடையான வேட்டி, சேலை அணிந்தனர். 17 அணிகளுக்கும் அடுப்பு மூட்டி தனித்தனியாக பொங்கல் பானை, பச்சரிசி, நட்டுச்சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டன. ஒவ்வொரு அணியும் தனித் தனியாக பொங்கல் வைத்தனர். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது, தோட்டத்தில் பணிபுரிபவர்கள் செய்துகாட்ட, 'பொங்கலோ பொங்கல்' என கோஷமிட்டு குலவை சத்தமும் எழுப்பி அசத்தினர்.

இதைத் தொடர்ந்து வெளிநாட்டினர் வைத்த பொங்கலை சுவைத்துப் பார்த்த நடுவர்கள் முதல் மூன்று அணியை தேர்வு செய்தனர். அவர்களுக்கு முதல் பரிசாக செவ்வாழை, இரண்டாம் பரிசாக மலை ஏத்தன், மூன்றாம் பரிசாக பச்சை வாழைக் குலைகள் வழங்கப்பட்டன. இந்தச் சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளர் பிரின்லியிடம் பேசியபோது... “வெளிநாட்டினர் நமது கலாசாரத்தை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த ஆட்டோ சேலஞ்ச் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.

அதேபோல், 'தமிழர்களின் கலாசாரம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. வேட்டி, சேலை அணியும்போது தனி மரியாதை கிடைக்கிறது. இங்கு ஒன்றுகூடிப் பொங்கல் வைத்தது எங்களது வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான ஒன்று' என வெளிநாட்டினர் கூறினர். தொடர்ந்து கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம் செல்லும் அவர்கள் வரும் 6 ஆம் தேதி அங்கிருந்து அவரவர் சொந்தநாட்டுக்குத் திரும்புகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com