பிரியாணியால் 46 பேருக்கு ஃபுட் பாய்சன் ஆன விவகாரம்- உணவு சோதனை முடிவில் வெளியான காரணம்

பிரியாணியால் 46 பேருக்கு ஃபுட் பாய்சன் ஆன விவகாரம்- உணவு சோதனை முடிவில் வெளியான காரணம்
பிரியாணியால் 46 பேருக்கு ஃபுட் பாய்சன் ஆன விவகாரம்- உணவு சோதனை முடிவில் வெளியான காரணம்

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 46 பேர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 5ஆம் தேதி அனுப்பப்பட்ட பிரியாணியின் பரிசோதனை முடிவு தற்போது வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகரில் சித்திரைவேலு என்பவர் கடந்த 4ஆம் தேதி அவரது வீட்டின் காங்கிரட் வேலை நடந்துகொண்டிருந்த போது வீட்டில் பணிபுரிந்தவர்கள் மற்றும் பக்கத்து வீட்டு நபர்களுக்கு புதுக்கோட்டை சாலையில் இருக்கின்ற A1 பிரியாணி சென்டர் என்ற உணவகத்திலிருந்து 40 சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கி வந்து கொடுத்து இருக்கின்றார். பணிகள் முடிந்து மாலை அனைவரும் சாப்பிட்டு இருக்கின்றனர்.

ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் உள்ளிட்டோர் சாப்பிட்டு இருக்கின்றனர். இவர்களுக்கு அன்று இரவே வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட்டு ஒருவர் பின் ஒருவராக அருகில் இருக்கின்ற அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

பிரியாணி அளவை குறைத்து சாப்பிட்டவர்களுக்கு மறுதினம் உடல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இப்படி மொத்தம் 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அதில் இரண்டு நபர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இவர்களில் ஹரிஹரசுதன், பார்த்திபன், அபி ஆகிய மூவரும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களானதால், இவர்கள் முதல் நாள் தேர்வை உடல்நிலை கோளாறோடு எழுதிவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அடுத்த தேர்வுக்கு தயாராகும் விதமாக மருத்துவமனையிலேயே படுக்கையில் அமர்ந்து படித்தனர். 

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்ட பிரியாணியின் மாதிரியை மைக்ரோ பயாலஜி சோதனைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனுப்பிவைத்தனர். கடந்த 5ஆம் தேதி அனுப்பப்பட்ட பிரியாணியின் பரிசோதனை முடிவு தற்போது வந்துள்ளது. அதில் பாக்டீரியா வளர்சியான Staphylo coccus Aureus(ஸ்டெப்லோ காக்கஸ் ஆரியஸ்) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் மலம் பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தியதில் எந்தவித பாக்டீரியாக்களும் கண்டறியப்படவில்லை. எனவே பிரியாணியின் ஆய்வு முடிவை வைத்து DRO தலைமையில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பிரவின்குமார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் மலம் பகுப்பாய்வு பரிசோதனையில் பாக்டீரியாக்கள் கண்டறியப்படவில்லை ஏன் என்று தலைமை மருத்துவரிடம் கேட்டதற்கு, ஒருவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அதிக அளவிலான ஆண்டிபயாட்டிக் மருந்து செலுத்தியபிறகே அவர்களிடமிருந்து மாதிரி பெறப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டதால் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர் நம்மிடையே தெரிவித்தார்.

உடல் நிலை பாதிக்கப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் இருந்து புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 11 வயது மாணவர் ராஜேஷ் அங்கிருந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவரது கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு அங்கு சிகிச்சையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com