உணவகங்களில் அதிரடி ரெய்டு நடத்தும் உணவு பாதுக்காப்பு துறை அதிகாரி..அதிரடி மாற்றம் செய்யப்பட்டது ஏன்?
தர்பூசணியில் நிறம் சேர்க்க ரசாயனம் கலக்கப்படுவதாக கூறியிருந்த உணவு பாதுகாப்பு அலுவலர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
கோடைகாலம் என்றாலே மக்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தர்பூசணிப்பழம். அப்போதுதான், அதன் விளைச்சலும் சரி , விற்பனையும் சரி அதிகரித்து காணப்படும். இதனிடையே, சமீபத்தில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் தர்பூசணியில் சிவப்பு நிறத்திற்காக ரசாயனம் சேர்க்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனால், மக்கள் தர்பூசணியை வாங்குவதை தவிர்க்க ஆரம்பித்தனர். தர்பூசணியின் விலை ஒரு டன் ரூ.10,000 மேல் விற்பனையான நிலையில், உணவுத்துறை அதிகாரிகளின் தவறான தகவல்களால், தற்போது ஒரு டன் தர்பூசணி ரூ. 2,000-க்கு விற்பனை ஆகிறது என்று விவசாய சங்கத்தினர் கவலை தெரிவித்தனர். எனவே, முதலமைச்சர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.
மேலும், சமீபத்தில் கோயம்பேட்டில், நடந்த தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தில் தர்பூசணிப்பழங்களை கீழே போட்டு உடைத்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர் விவசாயிகள்.
இதனைத்தொடர்ந்து , விளக்கமளித்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலர், சதீஷ்குமார், “ மக்கள் தர்பூசணிப்பழங்களை சாப்பிடலாம். எல்லா பழங்களிலும் கலப்படம் இருக்கிறது என்று நாங்கள் சொல்லவில்லை. உணவு பாதுகாப்புத் துறை எந்த வகையிலும் விவசாயிகளுக்கு எதிரி இல்லை. யாரோ ஒரு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.” தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமாரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் ,திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் கூடுதலாக சென்னை மாவட்ட பொறுப்புக்களை கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 2 ஆம் தேதியன்று, சென்னையில் உள்ள பிலால் உணவகத்தில் சாப்பிட்ட 18 க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக புகார் எழுந்தநிலையில், அங்கு அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ஆனால், பாதியிலேயே ஆய்வு செய்யாமல் திரும்பிவிட்டார். இதற்கு காரணம் அரசியல் அழுத்தம் என்றனர் சிலர். ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லாததால்தான் உடனே திரும்பிவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பணியிடை மாற்றம் செய்யப்பட்டிருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது.