”அன்னதானம் எல்லோருக்கும் பொதுவானது” - நரிக்குறவர்களுடன் இணைந்து சாப்பிட்ட அமைச்சர்

”அன்னதானம் எல்லோருக்கும் பொதுவானது” - நரிக்குறவர்களுடன் இணைந்து சாப்பிட்ட அமைச்சர்

”அன்னதானம் எல்லோருக்கும் பொதுவானது” - நரிக்குறவர்களுடன் இணைந்து சாப்பிட்ட அமைச்சர்
Published on

மாமல்லபுரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நரிக்குறவர்களுடன் சேர்ந்து, அன்னதான திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரப்பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்திப் பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின் கீழ் நாள்தோறும் 100 நபர்களுக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த பெண் உள்ளிட்ட சிலர் யூ-ட்யூப் சேனலொன்றில் ‘கோயிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிடுவதற்கு நாங்கள் சென்றபோது, அங்கு எங்களை முதல் பந்தியில் அமரக்கூடாது மற்றும் சாப்பாடு இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்’ என கூறியிருந்தனர். இதில் நரிக்குறவ பெண் வைத்த குற்றச்சாட்டு தெரிவிக்கும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.

இதைத்தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அந்தக் கோயிலில் தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். பின்னர், சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நரிக்குறவ பெண் உள்பட பொதுமக்களுடன் கோயில் வளாகத்தில் அமர்ந்து, அன்னதான திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டார்.

இதையடுத்து, நரிக்குறவ மக்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கோயில் வளாகத்தில் அமைச்சர் வேட்டி, சேலை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், காஞ்சிபுரம் இணை ஆணையர் ஜெயராமன், செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் பாலசுப்ரமணி, எம்எல்ஏ.பாலாஜி உள்பட பலர் உடனிருந்தனர்.

இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு, “நரிக்குறவ சமூதாயத்தை சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் பக்கத்தில் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் முதல் பந்தியில் அன்னதானம் வழங்கவில்லை என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அப்பெண் உள்பட அனைவருடன் கோயில் வளாகத்தில் அமர்ந்து உணவருந்தினோம். ஸ்தலசயன பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்வதற்காக, முதற்கட்டமாக ரூ.68 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 21ம் தேதி பாலாலயம் நடைபெற உள்ளது. மேலும், வருவாய் இல்லாத கோயில்களை, நிதி ஆதாரம் உள்ள கோயில்களுடன் உபகோயில்களாக இணைக்க முயற்சித்து வருகிறோம். இதன்மூலம், அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சிறப்பாக சுவாமி தரிசனம் செய்வதற்கும் மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் இப்பணிகளை அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது” என்றார்.

இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் அமைச்சர் சேகர் பாபு, அதில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். திருக்கோயில் அன்னதானம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. இன்று பொதுமக்களோடு அன்னதான உணவு உட்கொண்டோம்” என தெரிவித்துள்ளார். நிகழ்வின்போது, அவருடன் அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன், பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com