கொரோனாவை தடுக்க மதுரையில் சிறப்பு பறக்கும் படை
தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் கொரோனோ பரவலைத் தடுக்க 10 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது
மதுரையில் கொரைனா பரவலைக் கட்டுப்படுத்தவும், ஊரடங்கு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கத் தமிழகத்தில் முதன்முறையாக 10 பறக்கும் படைகளை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அமைத்துள்ளார். இந்தப் பறக்கும் படையில் மாநகராட்சி உதவி ஆணையர், வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் உள்ளனர்.
இவர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி, வணிக நிறுவனங்களை ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிப்பு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
இந்த 10 பறக்கும் படையின் பணிகளைத் தொடங்கி வைத்த மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் செய்தியாளர்களிடம் கூறுகையில் "மதுரையில் கொரைனா சமூக பரவல் இல்லை. காய்ச்சலை அறிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது. விதிமுறைகளைக் கண்காணிக்க 10 சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்